Sunday, December 31, 2017

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள

". நாளையத்தினம், தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு, அதினதின் பாடுபோதும்" (மத். 6:34).

ஒரு நாளுக்கு மொத்தம் 24 மணி நேரமுண்டு. அதற்கு 1440 நிமிடங்கள். அல்லது 86400 வினாடிகள். அப்படியானால், "ஒரு வருஷத்துக்கு எத்தனை வினாடி நேரம்?" என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு சுவர் மீது பொருத்தப்பட்ட பெரிய கடிகாரம், தன் அசைவாட்டை (பெண்டுலம்) இயக்கி ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று அதற்கு தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலை வந்தது. ஒரு வினாடிக்கு இரண்டு முறை அங்குமிங்குமாக, டிக் டிக்கென்று ஒலித்தால், ஒரு வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும்போது, எத்தனையோ கோடி முறை ஒலிக்க வேண்டியதிருக்கும்! என்று எண்ணி பெருமூச்சு விட்டது.

அப்படியானால், "பத்து ஆண்டுகளில்..." என்று நினைக்கும்போதே, நரம்புத் தளர்ச்சியும், மாரடைப்பும் வருவதுபோல இருந்தது. அருகிலிருந்த கைக்கடிகாரம் இந்த சுவர் கடிகாரத்தைப் பார்த்து, "அடா முட்டாளே, ஒரே நேரத்தில் ஒரு டிக் டிக் தானே ஒலிக்கிறாய்? அது எளிதானது. அதை செய்ய முடியாதா? ஏன் வருங்காலத்தை எண்ணி கலங்குகிறாய்?" என்றது. தேவபிள்ளைகளே, உங்களுக்குக் கொடுத்திருக்கிற நிகழ்காலத்தில், உங்களுடைய வினாடி நேரங்களை நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களென்றால், அது தன்னுடைய மணி நேரங்களை பொறுப்பெடுத்துக் கொள்ளும். கர்த்தர் மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், அவர், உங்களுடைய எதிர்காலத்தைப் பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்.

கடந்த காலத்தைக் குறித்து கவலைப்படாதிருங்கள். வருங்காலத்தை எண்ணி சோர்ந்து போகாதிருங்கள். நிகழ்காலம், உங்களுடைய கைகளிலிருக்கிறது. தேவபெலத்தோடு ஒவ்வொரு வினாடி நேரத்தையும், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிலர் வருங்காலத்தைக் குறித்து கவலைப்பட்டு கலங்கி, நிகழ்காலத்தை கோட்டை விட்டுவிடுவார்கள். கண்ணீரில் கழித்துக்கொண்டிருப்பார்கள். "அன்றன்றுள்ள தேவைகளை" ஆண்டவர் ஒவ்வொருநாளும் உங்களுக்குத் தர வல்லமையுள்ளவர். வனாந்தரத்தில் கர்த்தர் மன்னாவை அருளினபோது, ஒரு வாரத்துக்குரியதை, ஒரு மாதத்துக்குரியதை சேர்த்துக் கொடுக்கவில்லை. அன்றன்றுள்ள எல்லா தேவைகளையும் அன்றன்று கிருபையாய் சந்தித்தார்.

காலைதோறும், மன்னாவைப் பொழிந்தருளினார். ஆம், காலைதோறும் அவருடைய கிருபைகள் புதிதானவைகள். "ஆண்டவரே, இன்று எனக்கு நீர் போதுமானவர். இன்று என்னைப் பெலப்படுத்தி, சகாயம் செய்யும். இன்று என்னை நீர் வழிநடத்தும்" என்று ஜெபிப்பீர்களானால், கர்த்தர் வருங்காலத்தை ஆசீர்வாதமாக்கி, உங்களுக்குத் தந்தருளுவார். ஒரு உக்கிராணக்காரன், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். பேங்கில் வேலை செய்யும் குமாஸ்தா, தன் கையில் கொடுக்கப்பட்ட லட்சம் லட்சமான பணத்துக்கு மட்டுமல்ல, பைசாவுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்.
அதுபோல தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நேரத்துக்காகவும், நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் அல்லவா? கர்த்தரை துதிப்பதற்கும், வேதம் வாசிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும், போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால், நித்திய நித்தியமாக, கர்த்தரோடு மனமகிழ்ந்து களிகூரும் நேரங்கள் வேகமாய் வருகிறது.

நினைவிற்கு:- "முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்" (ஏசா. 43:18,19).

0 comments: