Friday, July 3, 2015

கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு "கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு"

கைலாச மகரிஷி எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை.

இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.

அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.

மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார். எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும்.

105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார். குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்!

இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்பட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார். அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.


"மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி"

இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும்.

நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்
1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.
2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.
3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.
4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.

நெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர்
சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் நவம்பர் 5, 1790 ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார்.

ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி. ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 வருடங்கள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.

அதன் பின்பு 1807ஆம் ஆண்டு அவருடைய பெரியப்பாவின் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் பணிகளைச் செய்து வந்தார். அங்கு இருக்கும் போது அவர் கிறித்தவ சமய ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 ல் குரு பட்டம் பெற்றார்.


இந்தியா வருகை :-

‘சீர்திருத்தத் திருச்சபை’யைச் (Reformed Church) சேர்ந்த இவர் 1814ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதி, ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். இந்தியா வந்த இவர் தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். அங்கு அனி வேன் சாமரன் (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அங்கு தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றார். ஜெர்மானிய கிறித்தவ மத போதகர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1820, ஜூலை 7ஆம் தேதி முதல் திருநெல்வேலியில் 18 வருடங்கள் பணியாற்றினார்.


சாதீயப் பாகுபாடு :-

திருநெல்வேலிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்த முதல் பாதிரியார் (1786 – 1805) வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலி சபையிலும் சாதிமதப் பழக்கங்களை அனுமதித்திருந்தார். ஆனால் ரேனியஸ் இந்தப் பாகுபாடுகளை அனுமதிக்கவில்லை. பள்ளி, ஆலயம், மாணவர் தங்கும் விடுதிகளிலும் அனைத்து மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மேலும் தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். இது போல் ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்களுக்கும் பாடசாலைகளை உருவாக்கினார். வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களை ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது.


சமயப் பணி :-

"கதீட்ரல் ஆலயம்"
திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ சமயப் பணியில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இதனால் இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைக்கப் பட்டார். இவர் திருநெல்வேலி பகுதியில் 371 கிறித்தவ சபைகளை நிறுவினார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் 1826முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை பொது மக்கள் வழிபாட்டிற்காகத் கட்டினார். அது இன்று தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆக சிறப்பு பெற்றுள்ளது. இதன் அருகில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நீறுவினார். அது இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியாக’ உயர்ந்துள்ளது . அதுபோல் உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு போதனாப் பள்ளியைத் தொடங்கினார். அது இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ எனும் பெயரில் அமைந்துள்ளது.

"சமத்துவக் குடியிருப்புகள்"
“சமூக அநீதிகளால் விளைந்த துயரங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வேகமாகக் கிறிஸ்தவம் தழுவியதாக ரேனியஸ் கருதினார்” என பால் அப்பாசாமி அவருடைய திருநெல்வேலி திருச்சபை வரலாற்றில் குறிப்பிடுகிறார். உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறித்தவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறித்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றில் நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.1827ல் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தைஜெர்மனியிலிருந்த “டோனா பிரபு” என்பவரின் நிதியுதவியோடு ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். அந்த ஊர் “டோனாவூர்” என்று பெயர் பெற்றது.

"சங்கங்கள்"
ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818 ல், “துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்” (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பு பின்னாளில் “கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்” (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் “துண்டுப் பிரசுர சங்கத்தை ”நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில்,துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தார். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.

“தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள்,கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார்.

“விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.

கிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தினர் அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடை விழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் , 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங் கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் “ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்”, “ஆலய பரிபாலன நிதித் திட்டம்” (Local Church Fund), “கைப்பிடி அரிசி காணிக்கை” போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார்.இத்திட்டங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்ப் பணி :-
இவர் சென்னையில் முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசக் கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவரானார்.இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்டார்கள்


தமிழ் நூல்கள் :-
இவர் பல தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார்.

உரைநடை நூல்கள்-
1. பூமி சாஸ்திர நூல்
2. பலவகைத் திருட்டாட்டம்
3. தமிழ் இலக்கணம்
4. வேத உதாரணத் திரட்டு
5. உருவக வணக்கம்
6. மனுக்குல வரலாற்றுச் சுருக்கம்
7. சமய சாரம்
8. புராட்டாஸ்ட்ண்ட் - கத்தோலிக்கன் உரையாடல்
9. சுவிசேஷ சமரசம்
10. கிறிஸ்து மார்க்க நிச்சயத்துவம்
11. தெய்வீக சாராம்சம்

பாட நூல்கள்-
1. பூகோளம்
2. சரித்திரம்
3. இயற்கை
4. வான சாஸ்திரம்
5. மனுக்குல வரலாறு
6. சூரிய மண்டலம்
7. பிரெஞ்சு இலக்கணம்
8. கால நூல்
9. தர்க்கம்

‘வெகுசன கிறிஸ்து இயக்கம்’, ‘அனைத்து மக்கள் கல்வி’, ‘சமுதாய நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் இவையாவும் இவருடைய தெளிந்த கோட்பாடுகளினாலும், அர்ப்பண உழைப்பாலும் தமிழ் நாட்டில் புதிய பரிமாணங்கள் பெற்று வளரலாயின.தமிழ் மொழிக்குச் சிறப்பாய்த் தொண்டாற்றிய வீரமாமுனிவர், போப் ஐயர், கால்டுவெல் ஐயர் போன்றவர்களுக்கு இணையாக ரேனியஸ் ஐயரும் கருதப்படுகிறார்.


வேதாகம மொழிபெயர்ப்பு :-
பப்ரிஷியஸ் ஐயருடைய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சடிக்கப்பட்டாலும், போதிய அளவில் பிரதிகள் சபை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிகமான பிரதிகள் தேவையென உணர்ந்த வேதாகம சங்கம் பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்பையே திருத்திப் பிரசுரிக்க எண்ணங் கொண்டு அந்தப் பொறுப்பை ரேனியஸ் ஐயரிடம் கொடுத்தது. சென்னையில் தொடங்கிய வேதாகம மொழிபெயர்ப்பு வேலை திருநெல்வேலியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கென ஒரு செயற்குழு நியமனமாகியிருந்த போதிலும், குழுவின் பிரதம மொழிபெயர்ப்பாளரான ரேனியஸ் ஐயரே முழு வேலையையும் செய்து வந்தார். அவர் புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் தொடங்கி தானியேல் வரையும் முடித்தார். மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களை மொழிபெயர்க்க முடியாமற் போனது ஒரு மாபெரும் இழப்பாகும். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ரேனியஸ் மொழிநடை யாவராலும் போற்றப்பட்டாலும், மொழிபெயர்ப்பில் இவர் பப்ரிஷியஸ் ஐயரைப் போல் மூலத்தை நுணுக்கமாய்த் தழுவாதது ஒரு பிழையாகக் கருதப்பட்டது.


பணி நீக்கம்:-
இங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதியதை அந்நூல் ஆசிரியர் பிரசுரிக்கவில்லை. ஆகையால் அதை ரேனியஸ் தாமாகவே பிரசுரித்து விட்டார். அதனால் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) ரேனியஸின் பணி நீக்கும் உத்தரவை, 1835 ல் டக்கர் ஐயருக்கு அனுப்பி, ரேனியஸ் ஐயருடன் உறவை முறித்துக் கொண்டது.


சின்னக் கோயில்:-
ரேனியசும் அவரைச் சார்ந்தவர்களும் ஆற்காடு சென்று அங்கே ஒரு புதிய அமைப்பை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, ரேனியஸ் அவருடைய ஆதரவாளர்களுடன் மீண்டும் திருநெல்வேலி திரும்பினார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் “யாத்ரிகர் சங்கம்” என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். இதனால் பாளையங்கோட்டையில் இருந்த ரேனியஸ் ஐயரின் ஆதரவாளர்கள் சி எம் எஸ் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். இதனால் அவர்களின் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அந்த ஜெபக் கூடம் தூய. யோவான் ஆலயம் என்று பெயர் பெற்றது. இன்று அது “சின்னக் கோயில்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.கடைசியாக இவர் ஆங்கிலேய அரசுக்கு “பைபிள் சங்கத்தை” ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினார்.

{“ 1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்” என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

“உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேனியசிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை கூறியிருக்கிறார்.

“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.}


மறைவு :-

1838ஆம் ஆண்டு, ஜூன் 5 அன்று மரணமடைந்தார். அவருடைய உடல் அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆபிரகாம் லிங்கனின் மனப்பக்குவம்!
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த காலம்.

அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை அரசியல்வாதி ஒருவரைப் பிரியப்படுத்துவதற்காக ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த பெரும்பகுதியான ராணுவத்தினரை அந்த இடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டார்.

யுத்த செயலாளரான எட்வின் ஸ்டான்டன் அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்துவிட்டார். அதோடு, ‘‘இப்படி உத்தரவைப் பிறப்பித்த ஆபிரகாம் லிங்கன் ஒரு முட்டாள்’’ என்றும் விமர்சித்தார்.

இது ஆபிரகாம் லிங்கனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட லிங்கன், ‘‘ஸ்டான்டன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் எப்பொழுதுமே காரியங்களை நிதானித்து அறிகிற புத்திக்கூர்மையுள்ளவர்’’ என்று பாராட்டினார். அவரை நேரில் சந்திக்க வருமாறு அழைத்தார்.

இருவரும் சந்தித்துப் பேசினார்கள். லிங்கனின் உத்தரவை செயல்படுத்த மறுத்த தன் நியாயமான காரணங்களையும், நிறைவேற்றியிருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் விளக்கிச் சொன்னார் ஸ்டான்டன். லிங்கன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். ‘‘உங்கள் விமர்சனம் என்னை சரி செய்துகொள்ள உதவியது’’ என்று புன்னகையோடு சொன்னார்.

ஆபிரகாம் லிங்கனின் மனப்பக்குவத்தை சிந்தித்துப் பாருங்கள். ‘ஜனாதிபதியான என் உத்தரவை நிறைவேற்றவில்லையே; என்னை மோசமான வார்த்தையால் விமர்சிப்பதா?’ என்ற ஆணவமோ, கோபமோ இன்றி எவ்வளவு சாந்த குணத்தோடும், மிகுந்த தாழ்மையோடும் அந்த சம்பவத்தைக் கையாண்டிருக்கிறார்! இவை அவருடைய ஆன்மிக உணர்வின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது வாயிலாகவே தமது குணாதிசயத்தைச் சொல்லும்போது, ‘நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்’ (மத்தேயு 11: 29) என்று சொன்னார்.

ஆபிரகாம் லிங்கன் ஆண்டவருடைய வார்த்தையாகிய வேதாகமத்தை கருத்தோடு படித்து உணர்ந்ததால் அந்த வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும் செய்தார். ஆகவே அவர் உண்மையிலே இயேசு கிறிஸ்துவிடமிருந்து அவருடைய சுபாவங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்; அவற்றைத் தன் செயல்களில் பிரதிபலித்தார். கற்பதைவிட அவற்றை நடைமுறைப்படுத்துவதே மேன்மையானது.

நமக்கு விரோதமான விமர்சனங்களை நாம் சந்திக்கும்போது நமது பிரதி செயல் எப்படி இருக்கிறது? இயேசுவின் சுபாவத்தை பிரதிபலிக்கிறோமோ? அல்லது நம்முடைய சுய சுபாவத்தைப் பிரதிபலிக்கிறோமோ?

அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்: ‘அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள்; கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ் செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்’ (தீத்து 1: 16).

கடல் தண்ணீரை- அந்தரத்தில் நிறுத்த உங்களால் முடியுமா?
அப்போஸ்தலர் தோமா கி.பி.52ல் இந்தியா வந்தார். சென்னை, கேரளாவில் அவர் ஊழியம் செய்தார்.

ஒருமுறை கேரள கடற்கரை வழியே அவர் வந்தார். அங்கே பலர் நின்றனர்.

அவர்களிடம்,""சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கின ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்.

அவர் தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவர் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். நிரூபிக்கிறேன்,'' என்றார்.

உடனே அவர்கள், "நீர் சொல்வது உண்மையானால், இந்த கடல்நீரை மேலே எறியும். அது கீழே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்'' என்றனர்.

அப்போஸ்தலர் அந்த சவாலை ஏற்றார். கை நிறைய தண்ணீரை எடுத்து ஜெபித்தார்.

அதை நோக்கி, "ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன். தண்ணீரே! ஆகாயத்தில் நில்,'' என்றபடியே மேலே எறிந்தார்.

என்ன ஆச்சரியம்! தண்ணீர் அப்படியே நின்றது.

இந்த அற்புதத்தை கண்ட சவாலிட்ட மக்கள் தங்கள் தெய்வமாக இயேசுவை ஏற்றுகொண்டார்கள்.

தேவாதி தேவன் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்ய அவர் ஆவலோடு கூட காத்திருக்கிறார்.

பாவி என்னும் கண்டுபிடிப்பு நவீன மருத்துவத்தின் தந்தையாகப் புகழப்படும் சேர். ஜேம்ஸ் சிம்சன் என்பார் 1847ம் ஆண்டு, அறுவைச் சிகிச்சையின் போது நோயாளிக்கு வேதனையுணர்வு ஏற்படாதிருக்கும் “குளொஃரோபோம்“ எனும் மருந்தைக் கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவத்துறையின் வளர்ச்சியில் பெரும் திருப்புமுனையாக உள்ளது.

குளொஃரோபோம் மருந்தைதக் கண்டுபிடித்த சில வருடங்களின் பின்னர் சேர். ஜேம்ஸ் சிம்சன், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் அவரிடம், “உங்களுடைய கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் பெறுமதியானதாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? என்று கேட்டான்.

சேர். ஜேம்ஸ் சிம்சன் அக்கேள்விக்கு குளோரோஃபோர்ம் என்றே பதிலளிப்பார் என்ற எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அவர் 'நான் பாவி என்பதையும், இயேசுக்கிறிஸ்து என்னுடைய இரட்சகர் என்பதையும் நான் கண்டுபிடித்ததையே என்னுடைய கண்டுபிடிப்புகளில் அனைத்திலும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்“ என்றார்

கணிதமேதையும் அண்டவெளி ஆராய்ச்சிளாளரும் பிரபல விஞ்ஞானியுமான கொப்பர்நிக்கஸ் என்பார் மரிக்கும் தருவாயில், தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக அல்ல, மாறாக இரட்சகரின் உதவி தேவைப்படும் ஒரு பாவியாகவே கண்டார்.

அவருடைய அறிவுத்தலின்படி அவரது கல்லறையில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது. “பவுலுக்கு காட்டப்பட்டது போன்ற இரக்கம் எனக்கு காட்டப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல், பேதுருவிற்குக் கிடைத்தது போன்ற ஒரு கிருபை எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. ஆனால் நீர் அந்தக் கள்ளனுக்கு கொடுத்த மன்னிப்பை எனக்கும் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்“

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் மேதைகளும் கூட தாங்கள் பாவிகள் என்பதையும் தம்மை இரட்சிப்பவர் இயேசுக்கிறிஸ்து என்பதையும் உணர்ந்துள்ளனர். இத்தகைய உணர்வு மனிதர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் அப்போது அவர்கள் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பையும் பரலோக வாழ்வின் மகிமையையும் பெற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் பாவிகளாக உள்ளனர். (ரோமர் 3:23) அவர்களை இரட்சிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (1 தீமோ. 1:15)

உண்மையில், நாமும் கண்டுபிடிக்க வேண்டிய உண்மையாக இது உள்ளது.

ஜான் வெஸ்லி-யிடம் ஊழியர்களே கற்றுக்கொள்ளுங்கள்! ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இவர் தன் வாழ்நாளில் 4லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையிலேயே பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் தேவனைப் பற்றி பிரசங்கம் செய்வார். நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் சுற்றுவார். இப்படி 40 ஆண்டுகள் தனது பயணத்தை நடத்தினார்.

பயணத்தின் ஊடே அவர் 400 புத்தகங்களையும் எழுதி முடித்து விட்டார். 4 ஆயிரம் பிரசங்கங்களை செய்துள்ளார். பத்து மொழிகளையும் பேசக் கற்றுக்கொண்டார்.

இப்படியே 83 வயது வரை சுறுசுறுப்பாகவே நடந்தது. என்ன தான் இருந்தாலும் முதுமை மனிதனை தள்ளாடச் செய்யுமே!

தொடர்ந்து 18 மணி நேரம் வரை எழுதக்கூடிய அவர், ""இப்போதெல்லாம் என்னால் 15 மணி நேரம் கூட தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. அவ்வாறு எழுதினால் கண்கள் களைப்படைந்து விடுகின்றன. அது மட்டுமல்ல! தினமும் இரண்டு தடவைக்கு மேல் பிரசங்கம் செய்ய முடியவில்லை. இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

முன்பெல்லாம் காலை 5.30 மணிக்கு எழுந்து விடுவேன். இப்போது இன்னும் கொஞ்சம் தூங்கலாமே என்ற எண்ணம் மேலிடுகிறது,'' என்று வருத்தப்பட்டு தன் டைரியில் எழுதி வைத்திருந்தார்.

இவர்களைப் போன்ற உழைப்பாளிகளைப் பார்த்து நாம் திருந்த வேண்டும்.

தேவனுடைய ராஜ்யத்துக்காக உழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

உண்மையும் உத்தமமும் சுறுசுறுப்பும் வாய்ந்த ஊழியர்களைத் தேவன் தேடுகிறார். சோம்பேறித்தனத்தை அறவே ஒழியுங்கள். தேவபணியை விருப்பத்துடனும், உற்சாகத்துடனும் செய்யுங்கள்.

-இவ்வாறு "சம்ஸ்" என்ற எழுத்தாளர் தன்னுடைய வலைபதிவில் தேவபணியை குறித்து குறிப்பிடுகிறார்.

ஐந்துவிரல் ஜெபம்
பெருவிரல் - இது உனக்கருகில் உள்ள விரலாகும். ஆகவே உனக்கு நெருக்கமானவர்களுக்காக முதலில் ஜெபிக்கத் தொடங்கு அவர்கள்தான் அடிக்கடி உன் ஞாபகத்திற்கு வரக்கூடியவர்கள். தமது அன்பானவர்களுக்காக ஜெபிப்பது “இனிமையான கடமை“ என C.S. லுயிஸ் என்ற தேவபக்தன் கூறியிருக்கிறார்.

ஆள்காட்டிவிரல் - இது ஒன்றை சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விரலாகும். எனவே வழிநடத்தும் உன் ஆசான்களாக போதகர்கள். ஊழியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என உனக்கு போதித்து வழிநடத்துபவர்களுக்காக ஜெபி. மற்றவர்களை சரியான பாதையிலே வழிநடததும் அவர்களுக்கு மிகுந்த ஞானம் அவசியமானதாகும். எனவே அவர்களை உனது ஜெபத்தில் நினைவுகூற மறவாதே.

நடுவிரல் - இது உயரமான விரலாகும். இது தலைமைத்துவத்தை ஞாபகப்படுத்துகிறது. எமது தேசத்தின் தலைவர்கள், அரச அதிகாரிகள், வியாபார தொழிற்துறை வல்லுநர்கள், நிர்வாகிகளுக்காக ஜெபி். இவர்கள்தான் எமது நாட்டின் மக்களை வழிடத்தி, தேசத்தை கட்டியெழுப்புகிறவர்கள. எனவே அவர்களுக்கு தேவனுடைய வழிநடத்துதல் மிக அவசியம்.

மோதிரவிரல் - ஒரு இசைக்கலைஞனிடம் கேட்டால் விரல்களில் மிகவும் பெலவீனமானது இந்த விரலே என்பதை ஒப்புக் கொள்வான். இது வேதனை துன்பம் துயரத்தில் உள்ளவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும என்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டியது மிக அவசியம்.

சுண்டுவிரல் - இது கடைசி விரலாகும். மற்றவர்களுக்காக ஜெபிக்கும் நாம் கடைசியாக நமது தேவைகளை கர்த்தரிடத்தில் ஏறெடுக்கலாம். இப்படியாக முதலில் மற்றவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கும்போது, மற்றவர்களுக்காக நமது தேவைகளை சரியான விதத்தில் கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வதோடு ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்