சார்லஸ் பின்னியின் வாழ்க்கை
பின்னி மனந்திரும்புதல்
சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் தேவபயம் அற்றவர். வாரன் என்ற இக்கிராமத்தில், கர்த்தரை அறிந்தவர் மிகச் சிலரே. பின்னி ஆலயத்திற்குச் சென்று பிரசங்கம் கேட்டதேயில்லை. இவ்வூரிலுள்ள ஆலயத்தில் பிரசங்கித்தவர் கல்வியறிவும் ஆவிக்குரிய நோக்கும் அற்றவர்.
தேவனைப் பற்றிய அறிவில்லாத இதே நிலையிலே, பின்னி, ஆடம்ஸ் என்ற நகருக்குச் சட்டப்படிப்பிற்காகச் சென்றார். மத சம்மந்தமான சத்தியங்களைச் சிறிதும் மதிக்காது, ஓய்வு நாளை தம் பிரியம் போல் செலவிட்டார். சட்டப்படிப்பிலே, புத்தக ஆசிரியர், பைபிளிலிருந்து பல பகுதிகள் எடுத்துக்கூறிக்கொண்டே வந்து, எப்படிப் பரிசுத்த வேதாகமம் சட்டங்களுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குகின்றது என்று விளக்கிக் காட்டினார். பின்னி வியப்புடன் அவற்றைப் படித்து, பின் தாமே ஒரு வேதாகமத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தார். இப்படி வேதாகமத்தைப் படித்து அதில் கூறியவற்றின் கருத்தை தியானித்து வந்தார். எனினும், அதில் கூறியவற்றில் அநேகப் பொருட்கள் இவருக்கு விளங்கவில்லை. ஆகவே சபைக் குருவிடம் சென்று அதைப்பற்றிப் பேசினார். மனந்திரும்புதல் என்றால் என்ன? இது பாவத்திற்காக துக்கிப்பதோடு நின்று விடுகிறதா? மனந்திரும்புதல், நாம் முயற்சிசெய்து சம்பாதித்துக் கொள்ளும் ஒரு மனோநிலையா? அல்லது நாம் பிரயாசப்படாமல் தானாகவே வரும் ஒரு நிலையா? மறு பிறப்பு என்றால் என்ன? விசுவாசம் என்றால் என்ன? மனந்திரும்புதலானது சுவிஷேசத்தில் சொல்லியவற்றை நம்பும்படியான ஒரு மனோநிலையை அடைவதினால் ஏற்படுகிறதா அல்லது உள்ளத்தில் பரிசுத்த ஆவியால் தோற்றுவிக்கப் படுகிறதா? இம்மாதிரியான பலவித கேள்விகளுக்குத் தகுந்த பதில் கொடுக்க முடியாமல் பாவம் அச்சபைக்குரு தவித்தார்!
வேதாகமத்தை அடிக்கடி வாசித்தாலும், சபை மூப்பரிடம் அடிக்கடி பேசி வந்ததாலும் , இவர் உள்ளத்திலெழுந்த புயல், பெருகினதேயொழிய அமரவில்லை. தாம் இறப்பதாயின் நரகத்தையடைவது திண்ணம் என்று திட்டமாய் அறிந்து கொண்டார். இம் மதத்தில் திட்டமா உண்மை இருக்கவேண்டுமென எண்ணினார்.
பின்னி தம்மைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைக் கண்ணுற்றபொழுது, சுவிஷேசத்திற்கும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் கணக்கிலடங்கா என்ற முடிவிற்கு வந்தார். இதனால் சுவிஷேசத்தை நம்பமுடியாமல் உழன்றார். எனினும் அவர் மனதில் எழுந்த கேள்விகள் முன்னிலும் பன்மடங்கு இவருள்ளத்திலெழுந்து இவரை வருத்தின. இப்படியே இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. தம் மனோநிலையயும், குருவின் அபிப்பிராயமும் வேறுபட்டிருந்த போதிலும், வேதாகமம் தேவனின் உண்மையான வார்த்தை என்ற உணர்வைப் பெற்றார். இச்சந்தேகம் தீர்ந்தபின், இனி தாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, சுவிஷேசத்திற்குக் கீழ்படிவதாக அல்லது எல்லோரையும் போலவே வாழ்வதா என்ற கேள்வி இவர் மனதிலெழுந்தது.
ஓர் ஓய்வு நாள் மாலை தம் ஆத்தும இரட்சிப்பைப்பற்றிய பிரச்சனையை உடனே தீர்ப்பதென்ற முடிவிற்கு வந்தார். கூடுமானால் தேவனிடம் சமாதானம் செய்யவேண்டும் என்றும் துணிந்தார். தம் அலுவலகத்தில் அன்று அவருக்கு அதிகவேலை இருந்தபோதிலும் தாம் செய்த தீர்மானத்தை ஓரளவு நிறைவேற்றினார்.
தாம் மிகவும் செருக்குள்ளவர் என்ற உண்மையைப் பின்னி சிறிதும் உணராதிருந்தார். இவர் சபைக் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் சென்றமையால் இவர் ஆவலோடு தேவனுடைய சத்தியத்தைத் தேடுகிறார் என்று சபையார் என்னினார். ஆனால் உண்மையில் இவர் மற்றவர்கள் தாம் கிறிஸ்துவைத் தேடுவதை எங்கே தெரிந்துகொள்வார்களோ என்று வெட்கப்பட்டார். ஒருவரும் பார்த்துவிடக் கூடாதென்று எண்ணி, கதவை இறுகப்பு+ட்டி, சாவித்துவாரத்தையும் அடைத்து மூலையில் போய் மெதுவாக ஜெபித்தார். வேதாகமத்தை வாசிக்கும்போது யாரேனும் வந்துவிட்டால் சட்டபுத்தகங்களை எடுத்து வேதாகமத்தின்மீது விரித்து சட்டப்புத்தகங்களை படிப்பதுபோல் பசாங்கு செய்வார்.
அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் இவருடைய பாவப் பாரம் பெருகிற்றெனினும், இவர் இருதயமோ கடினப்பட்டிருந்தது. கண்ணீர் சிந்த முடியவில்லை. தனியாகச் சென்று ஜெபித்தால் நலமாயிருக்கும் என்று அடிக்கடி எண்ணினார். செவ்வாய் கிழமை இரவு மிகவும் சோர்வுற்றிருந்தார். தாம் மரணத்திற்கு சமீபத்தில் இருப்பதுபோல் உணர்ந்தார். மரணமடைந்தால் நரகத்தில் அமிழ்வது உறுதி என்று அவருக்கு நன்கு தெரிந்தது. கல்வாரியில் தமக்காகப் பலியான கிறிஸ்துவின் சிலுவைக் காட்சி இவர் மனக்கண்முன் தோன்றிற்று. தெளிவாகவும் ஆழமாகவும் இக்காட்சி பரிசுத்தாவியானவரால் உணர்த்தப்பட்டதினால், இவர் தெருவிலே தம்மையறியாமலேயே நின்று நின்று சென்றார். தம் சுய நீதியையே நம்புவதைவிட்டு கிறிஸ்துவின் நீதியையே நம்புவது என்ற முடிவிற்கு வந்தார். இனிச் செய்யவேண்டியது தம் பாவத்தை அறிக்கையிட்டு முழுமனதுடன் பாவத்திலிருந்து திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதே என்று உணர்ந்தார். தம் கிரியைகளினால் இரட்சிப்பை பெற முடியாது என்றும், கிறிஸ்துவை ராஜாவாகவும் இரட்சகராகவம் ஏற்றுக்கொள்வதனால் மட்டுமே அதைப்பெற முடியுமென்றும் உணர்ந்துகொண்டார்.
பின்னியின் சொந்தக் கிராமத்திற்கு வடதிசையில் ஒரு காடு இருந்தது. இவர் இக்காட்டை நோக்கி நடந்தார். இருதயத்தைத் திறந்து அப்படியே ஜெபத்தில் ஊற்றிவிடுவதென்று உறுதியுடன் சென்றார். தாம் ஜெபம் செய்யப்போவதை எவரும் கண்டுகொள்ளக்கூடாதென்று கவனமாகச் சென்றார். ஒன்றன்மேலெதொன்றாக விழுந்துகிடந்த மரங்களுக்கிடையில் ஒரு நல்ல இடத்தைத் தெரிந்து கொண்டு அங்கு ஜெபம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஜெபம் செய்ய நாவெழவில்லை. இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லி ஏதோ பிதற்றினார். அவர் எதையும் மனப்பூர்வமாகச் சொல்ல முடியவில்லை. தாம் ஜெபிப்பதை யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் அவரைப் பிடித்தது. ஆத்தும இரட்சிப்பைப்பற்றி இரண்டிலொன்று பார்த்துவிட்டே அக்காட்டைவிட்டு வீடு செல்வதென்று சபதம் செய்திருந்தார். ஆனால் இப்பொழுதோ தம் இருதயத்தைக் கர்த்தருக்கு கொடுக்கமுடியாது திகைத்தார். ஆகவே துன்பக் கடலில் மூழ்கினார்.
தாம் கர்த்தரிடம் செய்த வாக்கையும் நிறைவேற்றக் கூடாத ஒரு நிலையிலிருப்பது இவர் வருந்தி மனம் நொந்தார். முழங்காலில்கூட இவரால் நிற்கமுடியவில்லை. திடீரென யாரோ ஒருவர் தன் பக்கமாக வருகது போல் உணர்ந்தார். உடனே கண்களைத்திறந்து பார்த்தார். ஆனால் அங்கு யாரும் வரவில்லை. காற்றில் மரக்கிளைகள் ஆடும் சலசலப்பு ஓசைதான் அது. அப்பொழுது இவர் உள்ளத்திலிருந்த செருக்;கும் ஆணவமும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல இவருக்குத் தெளிவாயிற்று. தன் இரட்சிப்புக்கு பெரும் தடையாயிருப்பது பெருமை என்றுணர்ந்தார். எல்லாவற்றையும் படைத்துக் காப்பாற்றும் சர்வ வல்லமையுள்ள பரிசுத்தமான தேவனிடம் பேச வந்துவிட்டு கேவலம் அற்ப மனிதன் தன்னைப் பார்த்துவிடுவானே என்று அஞ்சினேனே! என்னுடைய ஆணவத்தையும் அக்கிரமத்தையும் என்னென்றுரைப்பேன்? என்று கூறி தன்னையே நொந்து கொண்டார். அதன் பிறகு துக்கம் தாங்காது இப்பு+லோகத்திலுள்ள மக்களும், பாதாளத்திலிருக்கும் எல்லாப் பிசாசுக்களும் தம்மையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தாலும் ஜீவனுள்ள தேவனின் பிரசன்னத்தில் பாவங்களை அறிக்கையிட தாம் சற்றும் தயங்கப்போவதில்லை என்று அலறினார். பாவமானது அளவிடக்கரிய கொடும் தன்மையுள்ளதாயும் முடிவிலா வேதனையைக் கொடுப்பதாயும் இவருக்குத் தெரிந்தது. கர்த்தருக்கு முன்பு இது அவரை அப்படியே நொருக்கிற்று.
அச்சமயத்தில் தான் இவருடைய மனதில் வல்லமையுடன் தேவனுடைய வசனம் தோன்றி இவரது முழுக்கவனத்தையும் கவர்ந்தது. அப்பொழுது நீங்கள் கூடிவந்து என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுனீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.(எரே:29:12-13) நீரில் அமிழ்ந்து போகும் ஒருவன் உயிர்ப்படகைப் பிடிக்கும் வண்ணம,; தம் இருதயத்தால் இவ்வசனத்தைப் பற்றிக்கொண்டார். இவ்வசனம் வேதாகமத்தில் இருக்கிறது என்று அப்பொழுது அறியாதிருந்தார். எனினும் இது கர்த்தரின் வார்த்தை என்று அறிந்து, கர்த்தாவே உம் வார்த்தையின்படி நான் உம்மிடம் வருகிறேன். என் முழு ஆத்துமாவோடும், முழு உள்ளத்தோடும் உம்மைத்தேடுகிறேன். என் ஜெபத்தைக் கேட்டு என்னை இரட்சியும் என்று கெஞ்சினார். கர்த்தர் இவருக்கு அநேக வாக்குத்தத்தங்களைப் பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் அருளினார். இவ்வாக்குத்தத்தங்கள் இவருக்கு எவ்வளவு அருமையும் மதுரமுமாயுமிருந்தனவென்பதை நம் நாவாலுரைக்க இயலாது. வாக்கு மாறாத பரம ராஜாவின் வார்த்தைகளை எண்ணி எண்ணி மனமகிழ்ந்தார். இவ்வாக்குத்தத்தங்களையெல்லாம் பின்னி சுதந்தரித்து தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.
தம் மனம் முழுவதும் தேவனோடு தொடர்பு கொண்டு அவருடைய வசனங்களால் நிரப்பப்படுமட்டும் ஜெபம் செய்துவிட்டு வீடு நோக்கி நடந்தார். அதிகாலையில் ஜெபம் செய்யச் சென்ற பின்னி வீடு திரும்பியபோது, நடுப்பகலாயிருந்தது கண்டு ஆச்சரியமுற்றார். ஜெபத்திலேயே தம் உள்ளத்தையெல்லாம் செலுத்தியமையின், காலத்தைப்பற்றிய உணர்வையே இழந்துவிட்டார். முன்னிருந்த பாரம் உருண்டோடிவிட்டது. அவர் உள்ளத்தில் அமைதி நிலவிற்று. ஆனந்தம் பொங்கிற்று.
அன்று மாலை பின்னி பாவமன்னிப்பையும், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தையும் பெற்றார். அன்றிரவு தன் அலுவலகத்தில் தனிமையில் இருந்தார். தம் இருதயத்தை ஜெபத்தில் ஊற்றிவிடும் பொருட்டாய் அலுவலகத்தின் பின்புறமுள்ள அறைக்குச் சென்றார். அங்கு விளக்கு ஒன்றும் இல்லாதிருந்த போதிலும் அங்கு தேவனின் பிரசன்னம் இருந்தமையால், போதுமான ஒளி அங்கு இருப்பதுபோலவே பின்னிக்குத் தோன்றிற்று. கதவைச் சாத்தி, முழங்காலில் நின்ற பொழுது பின்னி இயேசுவை முகமுகமாயக்; கண்டார். மற்றெவரையும் சந்திப்பது போலவே அவரையும் சந்தித்தார். கிறிஸ்து இவருடன் ஒன்றும் பேசவில்லையெனினும், அவர் பார்த்த பார்வையினின்று ஒளியும் அன்பும் இவருள்ளத்தினுள் பாய்ந்தன. பின்னி, உள்ளம் உருகினவராய் கர்த்தரின் பாதத்தில் விழுந்து சிறு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுது கிறிஸ்துவின் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார்.
இவர் வெகுநேரம் இப்படியே ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். ஏனெனில் இவர் திரும்ப தன் அலுவலகத்திற்கு வந்த பொழுது, குளிர்காயும் பொருட்டாய் இவர் முன்பு நெருப்பிலிட்டுச் சென்ற பெரிய மரத்துண்டுகள் யாவும் எரிந்துகிடந்தன. நெருப்பினருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் இவர் மேல் அமருவிதமாக இறங்கினார். இவர் மனம், உடல், ஆவி அனைத்தும் தாங்க முடியாதவண்ணம் கர்த்தர் சமீபித்து வந்தார். மின்சார அலைகள் தம்முடைய உடலெல்லாம் பாய்வதுபோன்ற உணர்ச்சி இவருக்கு உண்டாயிற்று. அடுத்தடுத்து வந்த தேவ அன்பின் வௌ;ளத்தின் அலைகள் இவர் உள்ளத்தில் மோதின. அன்புக் கடவுளின் இன்பக் கடலில் மூழ்கினார். இவ்வனுபவத்தை மனித மொழியால் எடுத்துரைக்க இயலாதென்று அவரே கூறுகின்றார். தேவன் தமது வல்லமையை இவர் மீது ஊதுவது போல் தோன்றிற்று. அன்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். இவ்வன்பின் அலைகள் வர வர பெரிதாகிக் கொண்டே வந்தமையால் தேவனே!, இவ்வலைகள் இன்னும் அடுத்தடுத்து என்மீது வருமாயின் நான் தாங்க முடியாமல் இறந்துவிடுவேன். எனக்கதறினார். ஆயினும் அது மரண பயத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளல்ல.
அன்று இரவு பின்னி சீக்கிரமாய் படுக்கைக்குச் சென்றார். ஆனால் அவர் மேல் பாய்ந்துகொண்டிருந்த அன்புவௌ;ளத்தின் காரணமாகச் சரியாகத் தூங்க முடியாது மறுபடியும் விழித்துக் கொண்டார். இரவு வெகு நேரம் வரை விழித்திருந்து பின் அயர்ந்த நித்திரை செய்தார். இவர் காலை எழுந்த போது சூரியன் தன் வெண்கிரனங்களை எங்கும் பரப்பியிருந்தது. கடந்த இரவு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மறுபடியும் புதுபெலத்துடன் இவர்மேல் வந்தது. படுக்கையிலிருந்து எழுந்து முழங்காலில் நின்ற பொழுது ஆவியானவர் இவரது உள்ளத்தை நிரப்பிய பின், தன் ஆத்துமாவை ஜெபத்தில் ஊற்றினார்.
பின்னி எழுந்து தம் அலுவலகத்தினுள் சென்றார். அன்பின் அலைகள் இன்னும் இவர் உள்ளத்தில் மோதியடித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது ரைட் என்பவர் அலுவலகத்தினுள் நுழைந்தார். பின்னி ரைட்டின் ஆத்தும இரட்சிப்பைப்பற்றிச் சில வார்த்தைகள் தான் பேசினார். அதற்குள் ரைட் தலை கவிழ்ந்து கொண்டு அலுவலகத்தை விட்டகன்றார். அவர் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார் என்று பின்னிக்கு முதலில் விளங்கவில்லை. தான் சொன்ன வார்த்தைகள் ஈட்டிபோல் அவருக்குள் பாய்ந்தன என்றும், அதனால் இரட்சிப்புப் பெறும் வரை, ரைட் தம் உள்ளத்தை கர்த்தர்முன் ஊற்றினார் என்றும் பின்னி மறுநாள் தான் அறிந்தார். பின்னியுடன் அன்று பேசிய அனைவரும் தங்கள் இருதயத்தில் பாவத்தைக்குறித்துக் குத்தப்பட்டபின், தேவனோடு ஒப்புரவாகி சமாதானத்தைக் கண்டுகொண்டனர்.
பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பெற்ற அந்நாளிலிருந்து சுவிஷேசம் என்ற இந்நற்செய்தியைப் பிறருக்கு அறிவிப்பதையே தம் கடமையாகக் கொண்டார். சட்டப்படிப்பில் இவருக்கு கொஞ்சமும் பிரியமில்லை. பணம் சம்பாதிப்பதிலும் இவருக்கு ஆசையில்லை. உலக ஆடம்பரமும், முன் அனுபவித்த உலகுக்கொத்த உல்லாசங்களும், மற்றும் இசைகளும் இவரைக் கவர்ந்து கொள்ளமுடியவில்லை. முழு மனதையும் இயேசுவிலும் அவர் அருளும் இரட்சிப்பிலுமே செலுத்தினார். மாய உலகம் இவரை மயக்கவில்லை. ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதைவிட அருமையானப் பணி வேறேயில்லை என்று எண்ணினார். பாவத்தில் அமிழ்ந்து போகும் இவ்வுலகுக்குக் கிறிஸ்துவைக் காட்டும் சுவிஷேகரின் சேவையே உன்னதமான சேவை என்பது இவரது கோட்பாடு.
ரோம் நகரில் உயிர்மீட்சி
சபைகளுக்கு உயிர்மீட்சியநளிக்கும் பணியில், மன்றட்டு ஜெபம், தனித்தாள் ஊழியமும், வீடுவீடாகச் சென்று ஜெபிப்பது போன்ற இம்முறைகளையே பின்னி உபயோகித்தார். ஆலோசனைக்காக இவரிடம் வருவோர் அதிகரித்ததால், அவர்களுக்கென்று தனியாகக் கூட்டங்கள் ஏற்பாடு செய்து அவர்களுக்குத் தேவையானவற்றைத் தேவ ஆவியின் ஏவதலால் கூறுதல் அவருடைய வழக்கம்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை இவர் ரோமில் தம் ஊழியத்தைத் தொடங்கினார். காலையில், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை என்ற பொருளைப்பற்றிப் பிரசங்கித்தார். மத்தியானத்திலும், மாலையிலும் இதே பொருளில் தொடர்ந்து பேசினார். தேவ வார்த்தை பலமாகக் கேட்போரின் உள்ளத்தில் பாய்ந்ததை உணர்ந்தார். பகற்கூட்டத்தில் சபையார் தாங்க முடியாத பாவப்பளுவால் தலைகுனிவதைக் கண்டார். அங்குள்ள டீக்கனின் வீட்டில், ஆவிக்குரிய உதவி வேண்டிய சபையாருக்கென்று ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. செல்வாக்கும், கீர்த்தியும் வாய்ந்த சபை அங்கத்தினரும், அந்நகரில் வீண் பெருமை கொண்ட பேர்போன வாலிபரும் அங்கு கூடிவந்திருக்கக் கண்டு, அங்குள்ள சபைக்குரு ஒன்றும் புரியாமல் திகைத்தார். அவர்களின் உணர்ச்சிப் பெருக்கை அடக்க முடியாதென்று கண்டு, கூட்டத்தைச் சீக்கிரம் கலைத்துவிடுவதென்று பின்னி தீர்மானித்தார். மிகவும் திடமான மனிதருங்கூட பின்னி பேசிய சில வார்த்தைகளினால், நெஞ்சில் ஈட்டியை செலுத்தியது போல், இருதயத்தில் குத்துண்டு வேதனைப்பட்டனர்.
பரிசுத்த ஆவியானவர் உணர்த்தும் போது வேதத்தின் உண்மைகள் அம்புபோல் மக்களின் உள்ளத்தில் பாயும் என்பதை இக்காட்சியைப் பார்க்காதவர்களுக்குத் தெரியாது. தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போன்றிருந்தது. பின்னி தெளிவாக எல்லோருக்கும் விளங்கும்படியாகவும் பாவ மரணத்தினின்று தப்பிப்பிழைப்பதற்கு ஏதுவான இரட்சிப்பின் வழியை எடுத்துரைத்தார். கிறிஸ்துவை உலக இரட்சகராகச் சுட்டிக்காட்டினார். இதை, சபையாரால் தாங்கமுடியவில்லை. அதன் பின் பின்னி, மெல்லிய சத்தத்துடன் ஒரு சிறு ஜெபம் செய்தார். பின்னர் எல்லோரும் எழுந்து போகலாம் ஆனால் போகும்பொழுது ஒருவருடன் ஒருவர் பேசலாகாது என்று கூறினார். அன்று சபையாரில் அநேகர் பெருமூச்சு விட்டுவிட்டுக்கொண்டும், அழுது கொண்டும், அவ்விடம் விட்டகன்றனர்.
ஓர் இளையன் தன் வீட்டுவாயிலை அடையும்வரை அமைதியாகச் சென்றான். அதன் பின் உணர்ச்சிதாங்க மாட்டாது தரையில் விழுந்து, தன் பாவ நிலையை உணர்ந்து சத்தமிட்டு அழுதுதான். இக்குரலைக்கேட்ட அயலகத்தார் ஒடி வந்தனர். அங்கு வந்த அனைவரும் இப்படியே பரிசுத்த ஆவியாவரால் உணர்த்தப்பட்டு தங்கள் பாவ நிலையை உணர்த்து மிகவும் துக்கித்தனர். இதே மாதிரியான காட்சிகள் அன்று அநேக வீடுகளில் நடந்தன. அன்று கிறிஸ்துவில் அநேகர் புதிய வாழ்வு பெற்றனர் என்றும், அளவிலா இன்பத்துடன் இல்லம் திரும்பினர். என்று பிறகுதான் பின்னி அறிந்தார்.
அடுத்த நாட்காலை, பின்னி பாவப்பளுவால் துன்புறுவோருக்கு உதவி செய்யம் பொருட்டாய் வீடுவீடாகச் சென்றபோது, மிகவும் விந்தையான நிகழ்ச்சியைக் கண்டார். பாவத்தையும், நரகத்தையும் பற்றி பரிசுத்த ஆவியானவர் உணர்த்தியதால், இவர் சென்ற வீடுகளில், தரையில் முகம்குப்புற விழுந்துகிடப்போரையும் முழங்காலில் நின்று ஜெபிப்போரையும் கண்டார். மதியமும் இப்படியே வீடுவீடாகச் சென்று பேசியும், ஜெபித்தும் வந்தார். ஆலோசனை தேவையானவர் மிகவும் அதிகமாக இருந்தமையால், மறுபடியும் ஒரு கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது. நாலா திசைகளிலுமிருந்து மக்கள் கூட்டங் கூட்டமாக வந்தனர். அரங்கு மிகவும் பெரிதாக இருந்தபோதிலும், ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் நிறையக்கூடியிருந்தனர். முந்திய இரவுக் கூட்டத்தைப்போலவே இன்றும் இருந்தது. மனோவலிமையும் சுய நம்பிக்கையும் உள்ள அசாதரண மனிதரும், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தால் வெட்டப்பட்டுப் பாவத்தின் கொடுமையை உணர்ந்தனர். அவர்கள் தம் நிலையை எண்ணி கூட்டம் முடிந்தபின் வீடுசெல்லக்கூட பெலனற்றிருந்தனர். இரவு வெகுநேரம் வரை நீடித்திருந்த இக்கூட்டத்தில் அநேகர் மறுபிறப்படைந்தனர்.
பின்னிக்கு வேலை மிகவும் அதிகரித்தது. ஆலோசனை கேட்க வருவோர் மிகவும் அதிகமானபடியால் கூட்டம் அங்குள்ள ஆலயத்தில் ஒழுங்குசெய்யப்பட்டது. கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திற்குள் குழுமியிருந்த மக்களின் உணர்ச்சி அதிகரித்துவிட்டது. சபையார் உணர்ச்சியை அடக்கமுடியாது ஒரு நிலைக்கு வந்துவிடுதல் கூடாது என்ற பயத்தால் கூட்டம் கலைக்கப்பட்டது. அந்த இரவை ஜெபத்தில் கழிக்கவும், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் விடாப்பிடியாய் ஜெபித்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. அன்று இரவு கிறிஸ்துவை இரட்சகராக அநேகர் ஏற்றுக்கொண்டனர். இதன்பின் இருபது நாட்கள் அங்கள்ள ஆலயத்தில் பின்னி போதித்துவந்தார். பகலில் ஆலோசனைக்காக வருபவர்களுக்கென்று தனியாகக் கூட்டம் நடத்தப்பட்டது. இரவில் நடக்கும் பொதுவான கூட்டத்தில் பின்னி பேசினார்.
வெளியூர்களிலிருந்து வந்த குருக்கள் இவற்றைக்கண்டு வியப்பெய்தினர். மனந்திரும்பினோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர் எவர் என்று நிச்சயமாகக் கூறமுடியாதிருந்தது. ஆகையால் பின்னி ஒவ்வொருநாள் மாலையும், மனந்திரும்பினோரோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உரையாடி, ஆவிக்குரிய விசயத்தில் அவர்களுக்கு வேண்டிய உதவிசெய்தார்.
ஒரு நாள் காலை, கிறிஸ்தவரல்லாத வணிகர் பிரசங்க பீடத்திற்கு வெகுசமீபத்தில் வந்து அமர்ந்தார். பின்னி அங்கு கூடியிருந்த சபையாருக்கு எச்சரிக்கையாக சில வார்த்தைகளைப் பேசினார். திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டது போல் தம் ஆசனத்திலிருந்து கீழே விழுந்தார் இவ்வணிகர். இதைக்கவனித்திருந்த நாத்திகரான ஒரு மருத்துவர் , கீழே விழுந்தவரின் நாடியைச் சோதித்துப் பார்த்தார். மருத்துவர் ஒன்றும் பேசமுடியாமல் அங்கிருந்த மரத்தூணில் சாய்ந்து, மனக்கிளர்ச்சியுற்றவராகக் காணப்பட்டார். வணிகர் விழுந்ததற்குக் காரணம், பாவத்தின் கொடுமையைக்குறித்த தாங்கமுடியாத மனநோவுதான் என்றும், அதனால் அந்நொடியில் தன்மனதில் தோன்றிய உணர்ச்சிவேகத்தால் தனது நாத்திகமும் மறைந்து ஒழிந்தது என்றும், பிறகு இம்மருத்துவர் கூறினார். கூட்டத்தைவிட்டு வெளியே செல்லுமுன் இவ்விருவரும் முழுவதுமாகத் தங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தனர்.
நீதியுள்ள தேவன் பயங்கரமான காரியங்களை தம் நாமம் மகிமைப்படும்படி செய்தார். சிலர் கர்த்தருக்கு விரோதமாக எதிர்த்துப்போராடி பின்னியின் ஊழியத்திற்கு இடையு+ராக இருந்தனர். இவர்களில் மூவர் ஓய்வுநாளென்றும் பாராது, மதுபானமருந்தி, தேவனுக்கு விரோதமாகத் தூசணம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் செய்த அமளி வெகுநேரம் நீடித்திருக்கவில்லை. குடித்துவெறித்திருந்த இம்மூவரில் ஒருவன் திடீரென்று மாண்டு விழுந்தான். பராக்கிரமமுள்ள, ஜீவனுள்ள தேவனுக்கு எதிர்த்துநின்றதினால் விளைந்த பலன்தான் இது, என இவனது தோழர்கள் எண்ணி அஞ்சினர். இனி கர்த்தருடைய கோபத்திற்குத் தப்பிப் பிழைப்பது எங்ஙனம் என்ற திகிலுடன் இத்தீச்செயல்களை விட்டொழித்தனர்.
கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது. சுவிஷேசசெய்தி காட்டுத்தீப்போல் பரவி, மக்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி எங்கும் பெரிய புரச்சியைத் தோற்றுவித்தது. மக்களின் உள்ளத்தில் இன்பமும், பிறர்மீது அன்பும், இயேசுவின்பால் பக்தியும் ஏற்பட்டது. அவ்வூரிலுள்ள வணிகரும், மருத்துவரும்,வழக்கறிஞரும் முக்கியமான அரசாங்க பதவிவகிப்பவரும் கிறிஸ்துவின் அடியாராயினர்.
சுற்றிலுமுள்ள ஊர்களில் உள்ளவர்களும்கூட உன்னதமான தேவனின் மகிமையான பிரசன்னம் ரோமில் இருந்ததினால் மிகவும் பயந்தனர். அம்மாநிலத்தின் பிரதம நீதிபதி ஒருவர், யுற்றிக்காவில் வசித்தார். யுற்றிக்காவில் இருந்த ஒரு விடுதியில், இந்நீதிபதி தம்முடன் இருந்தவர்களுடன் ரோமில் நடக்கும் செய்திகளைப்பற்றி வேடிக்கையாகப் பேசி நகைத்தார். கொஞ்ச நாட்களில் இவர் ரோமிற்குச் செல்லநேரிட்டது. ரோமிற்கு ஒருமைல் தூரத்தில் இருக்கும்போதே இவருள்ளத்தில் திகிலும், கலக்கமும் எழுந்தன. இவ்வுணர்ச்சிகளைக் கலைத்துவிட முயற்சித்தும் முடியாமல் துன்புற்றார். பின்பு நகரத்திலுள்ள உள்ள ஒரு கனவானின் வீட்டிற்குச் சென்றார். அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, மனதிலெழுந்த எண்ணங்களை அடக்குவதற்காக இருக்கையைவிட்டு அடிக்கடி எழுந்து, பலகணி வழியாக வெளியே நோக்கிக் கொண்டிருந்தார். இவர் யுற்றிக்காசென்ற சில வாரத்திற்குள் கர்த்தருடன் ஒப்புரவாகி, பரிசுத்த ஆவியினால் புதியதொரு வாழ்வை அடைந்தார்.
இப்பட்டணத்தில் எங்கும் ஜெப ஆவி பெருகிற்று. எப்பக்கம் சென்றாலும். அங்கு ஜெபிக்கிறவர்களைக் காணலாம். தெருவில் இரண்டு மூன்று கிறிஸ்தவர்கள் சந்திக்க நேர்ந்தால், அங்கேயே ஒன்று கூடி ஜெபிப்பர். கிறிஸ்தவ சகோதரர்கள் சந்திக்கும்பொழுது ஜெபிக்காமல் பிரிந்துபோக மாட்டார்கள். மனந்திரும்பாத பாவிகள் தேவனுக்கு எதிர்த்துநிற்க நேரிடின், இரண்டு மூன்று கிறிஸ்தவர்கள் சேர்ந்து மன்றாடி ஜெபித்து வெற்றிபெறுவதுண்டு.
அமெரிக்க நாட்டின் சேனையில் உயர்ந்த பதவிவகித்த ஒருவரின் மனைவி அப்பொழுது ரோமில் இருந்தாள். அவள் ரோமில் மிகவும் செல்வாக்குடைய ஒரு பெரிய மனிதனின் மகள். அவள் கல்வியறிவு மிகுந்தவள். திடமான சித்தமும், வன்மைமிக்க குணமும் பெற்றவள். ஆனால் கர்த்தருடைய வேலைக்கு அவள் எதிர்த்துநின்றாள். அதைக்கண்டு கிறிஸ்தவர்கள் வருந்தி தேவனிடம் முறையிட்டனர். உள்ளத்தில் பரிசுத்த ஆவியினால்; ஏவப்பட்டுத் தாங்கமுடியாத வேதனையுடன் பெருமூச்சுடனும் அவளுக்காக ஜெபித்தனர். உடனே தேவ ஆவியானவர் அவளைப் பற்றிக்கொண்டு அவளிடம் கிரியைசெய்ய ஆரம்பித்தார். அன்று இரவு, கூட்டம் முடிந்து சபையார் கலைந்து வெளியே சென்றுகொண்டிருந்தனர். கோயில் குட்டி, ஓடோடிவந்து கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஓர் அம்மாள் தன் இடத்தைவிட்டுக்கூட எழுந்திருக்க முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், அவளுக்கு உதவிசெய்ய வரவேண்டுமெனவும் பின்னியிடம் கூறினான். பின்னியும் அவருடன் இருந்த கில்லட் என்ற பெரியாரும் அவளைப்பார்க்கச் சென்றனர். பாவபாரம் தாங்கமுடியாது, மிகுந்த வேதனையுடன் அவள் துன்புறுவதைக் கண்டனர். தன் சொந்தப்பிரயாசத்தால் ஒன்று செய்யமுடியாது என்று கிறிஸ்துவுடன் தன்னைத் தாமதமின்றி ஒப்புக்கொடுத்து விடுவதே தகுந்த முறையென்றும் பின்னி அவளுக்கு கூறினார். கில்லட் பெரியாரும், துணையாக அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அவள் அன்றிரவு விழித்திருந்து தனியாக ஜெபித்தாள். அடுத்தநாள் தன் பாவங்களைளெல்லாம் மன்னிக்கப்பட்டன என்ற நிச்சயத்தைப் பெற்றாள். பின்பு அன்பும் சந்தோஷமும் நிறைந்து, பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்ப ஒரு கிறிஸ்தவளானாள்.
ரோமில் இருபது நாட்கள் பின்னி செய்த இவ்வூழியத்தினால் நூற்றுக்கணக்கானோர் மனந்திரும்பி கிறிஸ்து இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். பரிசுத்தாவியான கர்த்தர் அற்புதங்கள் மூலமாகவும் பின்னியின் ஊழியத்தை வெகுவாய் வர்த்திக்கப்பண்ணி ஆசீர்வதித்தார். அந்நாள் முதற்கொண்டு காலையும் மாலையும் ஜெபக்குழு ஒன்று ஆலயத்தில் கூடிற்று. இதுவும் ரோம்தானோ என்று சந்தேகிக்கும் வண்ணம் மக்களின் வாழ்க்கை ஆவிக்குரிய நிலையில் மிகவும் உயர்ந்தது. பாவம் அங்கு தலைகாட்டத்துணியவில்லை. ரோமில் நடந்த அற்புத நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கே கூறப்படவில்லை. இங்கு எழுதப்பட்டவை மிகவும் சுருக்கமானதொரு குறிப்பேயாகும்.
யுற்றிக்காவிலுள்ள சபையின் குரு ஒருவர் தன்னுடைய சபையில் ஜெப ஆவி ஓரளவு காணப்படுவதாக பின்னியிடம் கூறினார். அங்குள்ள முக்கியமான ஒரு அம்மையார் சபையின் நிலையையும் உணர்ந்து, பாரத்துடன் ஜெபித்துக்கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் உள்ளம், கிறிஸ்துவை அறியாதவர்கட்காக இரக்கத்தால் உருகிற்று. இடைவிடாது அவர் ஜெபித்தமையினால் பெலன் குன்றி உடல் நலித்தது. கர்த்தர் தன் வேலையை இங்கு ஆரம்பித்திருப்பதாக பின்னி அறிந்து தம் ஊழியத்தை இங்கும் தொடங்கினார். தேவன் பின்னிக்குத் துணைநின்று, பரிசுத்த ஆவியை அளவில்லாமல் அருளினார். இரவுதோறும் சபையார் பெருங்கூட்டமாகக் கூடிவந்தனர். இக்கூட்டங்களில் வல்லமையுடன் தேவ வசனம் போதிக்கப்பட்டது. அங்குள்ள பிரஸ்பிட்டீயன் சபையிலுள்ள ஆய்க்கன், பிரேஸ் என்ற குருக்கள் பின்னியிடம் சேர்ந்து, உழைத்தனர்.
அன்று மாலை, அங்குள்ள நீதிபதியொருவர் சபையில் அமர்ந்திருந்தார். பின்னி சிறிதுநேரம்தான் பேசியிருப்பார், அதற்குள் அந்நீதிபதி தாம் அணிந்திருந்த போர்வையால் தம்மை இருகச்சுற்றிக்கொண்டு முழங்காலூன்றி ஜெபிக்க முற்பட்டார். இவர் அருகிலிருந்த அனைவரும் இவர் செய்கைகளைக் கண்ணுற்று ஆச்சரியமடைந்தனர். கூட்டம் முடியும்வரை அவர் முழங்காலிலேயே நின்றார். அன்று முழுவதும் பின்னி பேசிய வார்த்தைகள் இவர் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. இவருள்ளத்தில் அன்று அமைதியே இல்லை. பாவபாரம் இவரை அழுத்திற்று. ஆகவே பாவச்சுமை தாங்கமாட்டாமல், என் ஆத்துமாவே நீ கிறிஸ்துவை விசுவாசிக்கமாட்டாயா? பாவத்தை விட்டொழிக்க மாட்டாயா? இப்போதே இதைச் செய்வாயா? என்று தனக்குள்ளே கூறினார். பின்பு துக்கத்தால் சோர்ந்து நாட்காலியில் சாய்ந்தார். அந்நேரமே கிறிஸ்துவை தம் இரட்சகராக ஏற்றுக் கொள்வதென்று தீர்மானம் செய்தார். இவர் ஆத்துமாவை அழுத்திய பாவ முடிச்சு அதே நொடியில் அறுந்து விழுந்து ஒழிந்தது. பின் அமைதியாகத் தூங்கினார். காலையில் பூரிப்புடன் படுக்கையை விட்டெழுந்தார். களிப்பும், தேவ சமாதானமும் இவருள்ளத்தில் பொங்கின. அன்று முதல் அவர் கிறிஸ்தவன். உத்தம ஊழியராக சுவிசேஷப் பணியாற்றினார்.
பரிசுத்த தேவ ஆவியானவரின் வல்லமை அங்குள்ள விடுதியின் போக்கையே மாற்றியது. விடுதித்தலைவர்கூட உண்மைக் கிறிஸ்தவராக மனந்திரும்பி, கிறிஸ்துவின் அன்பால் கட்டப்பட்டு சுவிசேஷ பணியை கருத்தோடு செய்தார். அந்நகரிலுள்ள இப்பெரிய விடுதியே அநேகரைக் கிறிஸ்துவிற்குள் கொண்டுவரும் சாதனமாக மாறிற்று. உணவருந்த வருபவரும், இராத்தங்க வருபவரும் பரிசுத்த ஆவியானவரால், தாங்கள் பாவிகளென்ற உணர்வைப்பெற்று தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்புப்பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். அந்நாளில் கர்த்தரின் பிரசன்னத்தை உணராதவர் எவருமிலர்.
லோவில்லியிலிருந்து ஒரு வர்த்தகர் யுற்றிக்காவிற்கு தன் வியாபார விஷயமாக வந்து இவ்விடுதியில் தங்கினார். ஊரெங்கும் பக்தி சம்மந்தமான பேச்சுக்கள். இது இவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. பாண்டசாலைகளிலும் இதே பேச்சாகத்தானிருந்தது. ஆகவே வந்த காரியத்தை முடிக்கமுடியாது திகைத்தார். வீடுதிரும்புவதற்கெனத் தீர்மானித்து மறுபடியும் விடுதி சென்றார். விடுதித் தலைவர் கருத்தோடு இவ்வர்த்தகருக்காக ஜெபிக்கும்படி அங்குள்ளவர்களைக் கேட்டுக்கொண்டார். பிறகு, முன்கூறிய நீதிபதியின் அறைக்கு அவரை அழைத்துச்சென்றார். அங்கு விடுதியிலுள்ளோர் ஒன்று கூடி இவரிடம் ஆவிக்குரிய விடயங்களைக்குறித்து பேசி ஜெபித்தனர். அவ்விடத்திலேயே இவ்வணிகர் தம்மைக் கிறிஸ்துவின் கருணைக்கரங்களில் ஒப்பிவித்தார். லோவில்லி நகரில் இவர் ஒரு முக்கிய கனவானாக இருந்தமையால் இவர் கூறியவற்றையெல்லாம் அந்நகர் மக்கள் வியப்புடன் கேட்டனர். இதனால் லோவில்லியிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஆரம்பமாகி அங்கும் பெரியதோர் உயிர்மீட்சி உண்டாகிவிட்டது.
நெட்டில்டன் என்பவர் இவருடைய எழுப்புதல் கூட்டங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு, பின்னியின் கொள்கைக்குமாறாகப் பரப்பினார். பின்னி இவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தவே இல்லை. இத்துண்டுப் பிரசுரங்களை வாசித்தாரெனினும் இவற்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. இப்படி எழுதப்பட்ட காகிதங்களின் மூலம் சில குருக்கள், பின்னியின் கொள்கையையும், எழுப்புதல்க் கூட்டங்களையும் வெறுத்தனர்.
எனினும் காரியம் கர்த்தருடையதாதலால் பின்னியின் ஊழியத்தைத் தேவன் ஆசீர்வதித்தார். சில வாரங்களுக்குள் ஐந்நூறு பேருக்கதிகமானவர்கள் மாறுதலடைந்தனர். இம்மாதிரியான எழுப்புதல்க் கூட்டங்கள் உணர்ச்சியை மாத்திரமே கிளப்பிவிடுகின்றன. இம்மாதிரி உணர்ச்சி வேகத்தால் மதப்பற்று ஒருவன் பெறுவதால், உள்ளம்தெளிந்தபின் இம்மதப்பற்று ஒழிந்துபோகுமென்று சிலர் கருதினர். ஆனால் புது ஜீவியம் பெற்றவரில் அநேகர் முடிவுவரை தேவனுக்கென்றே வாழ்ந்தனர்.
எழுப்புதல் கூட்டங்களுக்கு விரோதமாக ஒரு சபை குரு துணிச்சலாக எதிர்த்துநின்றார். பின்னியின் ஊழியத்தில் வெறுப்படைந்தும், எழுப்புதல்க் கூட்டங்களில் நம்பிக்கையின்றியும் ஒரு பொதுக் கூட்டத்தில் காரசாரமாகப் பேசினார். இதையறிந்த இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஊழியத்தைப் இப்பேச்சு பாதிக்காமலிருக்க வேண்டுமென ஒன்றுகூடி ஜெபித்தனர். அன்று இரவு இப்போதகர் தம்முடைய அரங்கில் செத்துக்கிடந்தார். இது தேவனால் இவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையென்று மக்கள் அறிந்து தேவனுக்கு மிகவும் பயந்து பின்னியின் கூட்டங்களுக்கு ஒழுங்காக வந்து தேவனுடைய வார்த்தையைக்கேட்டனர்.
கர்த்தர் தம்முடைய வல்லமையால் செய்த பலத்த காரியங்களைக் காணும் பொருட்டாய் தூரமான இடத்திலிருந்து அநேகர் அங்கு வந்தனர். ஓர் உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலைபார்த்துவந்த ஓர் இளம் பெண், யுற்றிகாவில் நடந்தவற்றைச் செய்தித்தாளில் படித்து அறிந்தாள். ஆகவே பள்ளிக்கு லீவு கேட்டுக்கொண்டு யுற்றிக்கா வந்துசேர்ந்தாள். இங்கு நடந்த காரியங்களைக் கண்ணுற்ற இவளுக்கு ஒரே ஆச்சரியமாயிற்று. ஆனால் பின்னியின் பேச்சு இளுக்குப் பிடிக்கவில்லை. வேலையில் திறம்படைத்த, கல்வியறிவு வாய்ந்த நாகரீக மாது இவள். இரவுதோறும் இவள் கேட்ட வேதவசனம் இவளுடைய வீண் பெருமையையும் தன்னம்பிக்கையையும் வேரோடு ஆட்டி வைத்தது.
பாவியினுடைய பாநிலையும், பாவிக்கு நித்திய காலமாக நரகத்தில் கிடைக்கும் ஆக்கினையும் தெளிவாகக் கூறப்பட்டன. இது இவளுக்குப் பிடிக்கவில்லை. உண்மையை முகமுகமாகப் பார்க்க முடியாமல் சில நாட்கள் வேதனையால் உள்ளம் கலங்கினாள். இதன் பின் இவள் பின்னியிடம் சென்று , தேவன் அன்புள்ளவராதலின் பாவிக்கு இவ்வளவு கொடுமையான ஆக்கினையைக் கொடுக்க மாட்டார். எனக்கூறினாள். பாவத்தின் உண்மையான கொடியத்தன்மை என்னவென்று இவள் அறியாததே. இவள் இங்ஙனம் பேசக்காரணம் என்றும், இவ்வுண்மையை இவள் அறியாதிருப்பாளேயாகில், பாவியைத் தேவன் நரகத்திற்கு அனுப்புவதும் மிகவும் நியாயமே என்றும் கூறியிருப்பாள் என்று பின்னி கூறினார். பின் பாவியின் ஆக்கினையைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மறுக்கமுடியாத உண்மைகளை இவளால் சகிக்க முடியாமையினால் துன்புற்றாள். பின் சில நிமிடங்களுக்குள் தன்னுடைய பயங்கரப் பாவநிலையை உணர்ந்தாள். இதை ஆவியில் உணர்ந்த பின்னி கிறிஸ்துவின் இரட்சிக்கும் ஆற்றலை இவளுக்கு எடுத்துக் கூறினார்.
இப்பெண்ணின் முகம் வெளுத்தன. துக்கம் தாங்க முடியாமல் கட்டிலில் விழுந்தாள். இருதயத்திலுள்ள பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டாள். உடைந்த உள்ளத்துடனும், நெஞ்சு உருகும் சோகத்துடனும், இரட்சிப்பிற்காகத் தேவனிடம் கெஞ்சினாள். சிறிது நேரத்திற்குள் இவளை அழுத்திய பாவப்பளு நீங்கியது. அங்கேயே இயேசுவின் ஆச்சரிய அன்பை ருசித்தாள். தனது ஆசிரியர் தொழிலை ராஜினாமா செய்துவிட்டு அயல் நாட்டிற்கு மிஷனறியாகச் சென்றாள். அங்கு அவள் திறம்படைத்த மிஷனறியாகப் பணியாற்றினாள்.
ஒரிஸ்கனி கிரீக் என்னும் இடத்தில் நியு+யார்மில்ஸ் எனப்படும் பருத்தியாலை ஒன்றிருந்தது. பின்னி இங்கு பிரசங்கம் செய்யும் பொருட்டாய் அழைக்கப்பட்டார். அன்று பின்னியின் பிரசங்கத்தைக்கேட்க அங்குள்ள பள்ளியில் அநேகர் கூடிவந்திருந்தனர். இவ்வாலையிலுள்ள வாலிபர் தேவனுடைய வார்த்தையை விருப்பமுடன் கேட்டனர். அடுத்தநாட் காலையில் இவ்வாலையைச் சுற்றிப்பார்க்க பின்னி சென்றார்.
அங்குள்ள தொழிளாலரிடையே ஒருவித கலக்கம் நிலவியது. அங்கு வேலைசெய்து கொண்டிருந்த இருபெண்கள் இவரைக்கண்டதும் ஒருவருடன் ஒருவர் ஏதோ பேசிக்கொண்டனர். இவர்கள் உள்ளத்தில் கலக்கம் இருப்பது பின்னிக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனினும் இவரைப் பார்த்ததும் முயற்சியுடன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டனர். பின்னி நெருங்கி வரவர இவர்களில் ஒரு பெண்ணின் மனத்துன்பம் அதிகரித்தது. பின்னி கருணையுடன் இவளை உற்றுநோக்கினார். இப்பெண், பின்னி தன்னைப் பார்த்தமாத்திரத்தில் உணர்ச்சி வேகத்தில், நிற்கமுடியாது தரையில் விழுந்து கதறியழத் தொடங்கிவிட்டாள். கொஞ்ச நேரத்திற்குள் ஆலையிலுள்ள அனைவரும் அங்கு கூடிவிட்டனர். அதற்குள் அநேகர் தாங்கள் பாவிகளென்றும், பாவத்தின் முடிவு மரணமென்றும் பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டமையால், கண்ணீருடன் மனஸ்தாபப்பட்டு நின்றனர். ஆலைத் தலைவர், இவ்விபரீதக்காரியங்களைக் கண்ணுற்று, பின்னியின் ஆலோசனைப்படி ஆலையைமூடி தொழிளாலிகளுக்கென தனியாக ஒருகூட்டம் ஒழுங்குசெய்தார். பின்னி இக்கூட்டங்களில் பேசினார். சில நாட்களில் இவ்வாலையிலுள்ள அனைவருமே, கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
உயர்ந்த நிலையிலுள்ள ஜெபவாழ்க்கையும் ஆழ்ந்த பக்தியும் வாய்ந்த ஓர் அம்மையார் யுற்றிக்காவில் இருந்தார்கள். ஹமில்டன் கல்லூரியில் இவரது சகோதரனின் புதல்வரான வெல்டு படித்துக்கொண்டிருந்தான். எழுப்புதல் கூட்டங்களுக்கு இவன் வரவேண்டுமென்ற ஆசையுடன் ஓர் ஓய்வுநாள், தன் வீட்டிற்கு வெல்டை அவ்வம்மையார் வரவழைத்திருந்தார்கள். பின்னியின் பேச்சு இவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகையால் பின்னி பேசும் கூட்டங்களுக்குச் செல்ல மறுத்துவிட்டான். காலையில் சங்கை ஆய்க்கனும், மாலையில் பின்னியும் பேசுவது வழக்கம். ஆகவே காலையில் சங்கை ஆய்க்கனின் பேச்சைக் கேட்கப் போவதாக இவன் உரைத்தான். இதையறிந்த ஆய்க்கன், காலையில் பின்னியையே பேசும்படி செய்தார். ? ஒரு பாவி அநேக நன்மைகளைக் கெடுக்கிறான் ? என்பதுதான் பின்னி பிரசங்கிக்கும்படியாக எடுத்தக்கொண்ட வசனம். இவ்வசனத்தில் எவரும் பிரசங்கிக்க பின்னி கேட்டதில்லை. பின்னிகூட இப்பொருளில் பேசியதில்லை. ஆனால் அன்று தேவனுடைய வார்த்தை வல்லமையுடனும், கிரியை செய்யும் ஆற்றலுடனும் இருந்தது. ஒரு பாவி எப்படி அநேகருடைய ஆத்துமாக்களுக்கு கேடு விளைவிக்கலாமென, அநேக உதாரணங்களுடன் தெளிவாக எடுத்துக்காட்டினார். இவை இவ்வாலிபனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
கூட்டத்தைவிட்டு எழுந்து வெளியே போய்விட முயன்றான். இதைக் கவனித்த இவனது அத்தை, முன்னுள்ள நாற்காலியில் கவிழ்ந்துகொண்டு ஜெபம் செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு இடையு+று செய்ய விரும்பாததால், மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். இப்படி இரண்டு மூன்றுதரம் நடந்தது. பின் கூட்டம் முடியும் வரை அமைதியாக இருந்துகொண்டான்.
அடுத்தநாள் காலையில் பின்னி, இவ்வாலிபனைத் தெருவில் சந்தித்தார். வெல்டு முரட்டுத்தனமாக வசைமொழியைப் பின்னியின் பேரில் பொழிந்தான். இந்த மாதிரி பின்னி என்றுமே வசைச்சொல் கேட்டதில்லை. அருகில் இருந்தவர்களின் கவனத்தை இது கவர்ந்தது. பின் வெல்டை நோக்கி ? ஒரு குருவின் மகனான நீ இப்படிப்பேசுவது நியாயமாகுமா? ? என்று கேட்டார். அவ்வார்த்தைகளைக் கேட்ட வெல்டு இன்னும் கேவலமான சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவ்விடம் விட்டகன்றார்.
பின்னி ஆய்க்கனின் வீட்டையடைந்து சிறிது நேரத்தில், கதவை யாரோ தட்டினர். அங்கு நின்றது யாரென்று நினைக்கிறீர்கள்?? வெல்டுதான்! அவன் மனமுடைந்தவனாக மனச்சோர்வுடன் காணப்பட்டான். தான் பின்னியிடம் இப்படி நடந்துகொண்டதற்கு மனம்வருந்தி தாழ்மையுடன் மன்னிக்கும்படி கெஞ்சினான். பின்னி அன்போடு அவன் கரங்களைப்பற்றி, தனியாக அவனை அழைத்துக்கொண்டுபோனார். தான் அவருக்கு விரோதமாக மனதில் ஒன்றும் நினைக்கவில்லை என்று கூறி, இயேசுவிற்குத் தாமதமின்றி அவன் தன் இருதயத்தைக் கொடுப்பதே சரியான முறையென்று கூறினார். அன்று இரவு முழுவதும், வெல்டு தனியாக ஒரு அறைக்குச் சென்று ஜெபித்தான். எப்படி ஜெபிப்பதே என்று இவனுக்குத் தெரியவில்லை. இவனுடைய மனதில் அச்சமும், கலக்கமுமே இருந்தன. அதிகாலையில் ஏதோ ஒரு பாரம் தன் இருதயத்தை அழுத்துவது போன்று உணர்ந்தான். அக்கனமே இவன் தன் இருதயத்தை இயேசுவின் முன் ஊற்றிவிட்டடான். பிறகு, வாழ்வில் புதியதொரு நோக்கமும், சந்தோஷமும் பெற்றான். மறுநாள் இரவு கூட்டத்தில், தான் தேவனுடைய பணிவிடைக்கு இடையு+ராக இருந்ததாகக் கூறி சபையாரிடம் தன்னை மன்னிக்கும்படி கேட்டான். பின்பு வெல்டு வெற்றிகரமான கிறிஸ்தவனாக விளங்கி அநேகரைக் கிறிஸ்துவின் அடியாராக்கினான். அதன் பின் அங்க நிகழ்ந்த எழுப்புதல் கூட்டங்களில் முக்கியமான பேச்சாளரில், வெல்டும் ஒருவனானான்.
புதிய இருதயத்திற்காகப் பாவிகள் ஜெபிக்கவேண்டுமென்று பின்னி போதிக்காமல், புதிய இருதயத்தை ஒரு பாவி முயன்று பெறவேண்டுமென்றும், தாமதமின்றி தன்னை முழுவதுமாக தேவனிடம் ஒப்பிவிப்பது அவர்களின் கடமை என்றும் போதித்தான். மக்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கவேண்டுமென்றும் பரிசுத்தமும், அன்பும் நம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கையை உடனே பெறவேண்டுமென்றும், பின்னி பிரசங்கித்தார். இப்படி விசுவாசிகள் முழுவதுமாக தேவனுக்கு தங்களை ஒப்பியாமலிருந்தால், அது தேவனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் விரோதமான பாவம் என்று கூறினார். இப்படிப்பட்ட போதகங்களை அநேகர் எதிர்த்தபோதிலும், தேவனுடைய ஆவியானவர் வல்லமையாக இக்கூட்டங்களில் கிரியை செய்தார். சிலர் சில மணிநேரங்களில் தங்கள் பழைய பாவ வாழ்க்கைகளை ஒழித்து, இப்புதிய வாழ்க்கையை அடைந்தனர். சில நிமிடங்களில் இப்படி மாறுதலடைந்தவர்களும் உண்டு. திடீரென ஏற்படும் இம்மாறுதல்கள் அநேக நாட்களுக்கு நிலைத்திருக்காது என்றனர் சிலர். ஆனால் இப்படி பின்னியின் ஊழியத்தில் இழுக்கப்பட்டவர்கள், ஸ்திரமுள்ளவர்களாயும், கிறிஸ்தவ உலகிற்கே ஒளிவீசும் பிரகாசமான நட்சத்திரங்களாகவும் விளங்கினர்.
நண்பா, பின்னியின் வெற்றியுள்ள வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று உனக்குத் தெரியுமா?? தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலுமாகக் கீழ்படிந்ததனாலேயே இவ்வாற்றல் இவருக்குக் கிடைத்தது. பாவத்தின் கொடுமையின்றி உன்னைக் காப்பாற்றக்கூடிய இயேசு இரட்சகரை நீ அறிவாயா? உனக்காக கல்வாரியில் மாண்டவரை முழு இருதயத்துடன் நீ என்றாவது தேடியதுண்டோ? சிறந்த மனப்பான்மையுள்ள எவரும் இப்பக்கத்திலுள்ளவற்றை வாசித்தபின், இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்பார் என்பதற்கு சந்தேகமில்லை.
தேவனுடைய இரட்சிப்பைப் பெற நீ நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் மூன்று உள்ளன :-
01. மனந்திரும்புதல்
02. பாவங்களை அறிக்கையிடல்.
03. தேவனுடைய வார்த்தையைப்பற்றிக்கொள்.
பாவத்திற்கு ஓரளவு துக்கப்படுதல்தான் மனந்திரும்புதல் என்று பலர் எண்ணுகிறார்கள். அப்படிப்பார்க்கப் போனால், நரகத்தில் பாவத்திற்காக துக்கிப்பவரும், தங்களையே நொந்து கொள்பவரும் அநேகர் இருக்கின்றனர். சிலர், தாங்கள் தப்பிதம் செய்யும்போதெல்லாம் அதற்காக வருந்துவதாகக் கூறுகின்றனர். அப்படிச் செய்வதுதான் மனந்திரும்புதல் என்று நினைக்கிறார்கள். அவர்கள் பாவம் செய்தபின், மனக்கசப்புடன் உள்ளத்தில் ஒருவிதத் துன்பத்தையும் உணருவதால் வருந்துகின்றனரே தவிர, பாவத்தை முற்றிலும் வெறுப்பதினாலன்று. பாவத்தை ஒழித்துவிடுவதுதான், உண்மையாக மனந்திரும்புதலுக்கு அடையாளம். இது தேவனுக்கு விரோதமாக ஒருவர் குற்றம் செய்வதற்காக அவர் உணரும் துக்கம்.அறியாமையுள்ள காலங்களில் தேவன் காணாதவர் போலிருந்தார். இப்போதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷர் எல்லாருக்கும் கட்டளையிடுகிறார். (அப்.17:30)
மனந்திரும்பு என்பதுதான் கர்த்தருடைய கட்டளை. மனந்திரும்புதல் நீ நிறைவேற்ற வேண்டியதொன்று. உண்மையாகவே தேவனைத் தேடவேண்டுமென்று நீ முயற்சிக்கும்போது, பரிசுத்தாவியானவர் உனக்கு உதவிசெய்வார். பரிசுத்தாவியானவர், தேவனுடைய வார்த்தைக்கு நீ கீழ்படிய வேண்டுமென இத்தனை நாட்களாக உன்னுடன் போராடினார். நீயாகவே தேவனைத்தேட ஆரம்பித்தால், ஆவியானவர் நீ செய்யவேண்டியதெல்லாவற்றையும் உனக்கு உணர்த்தவது எவ்வளவு நிச்சயம்! கல்வாரி சிலுவையின்மீது ஆவியானவர் உன்னை நிறுத்துவார். சிலுவையில்தான் உன் பாவத்தின் கொடுமையை நீ உணருவாய். தேவகுமாரனை நொறுக்கியது உன் பாவமே என்று நீ அறிவாய்.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசா.53:5).
உன்னுடைய பாவநிலைமையும், பாவியாகிய உன்னை நேசித்ததால் தம்முயிரைத் தியாகம் செய்த இயேசுவின் அன்பும், உன்னுடைய பாவங்களை வெறுத்து கிறிஸ்துவின் பாதங்களில் கதறிவிழும்படி செய்கிறேன். பின்பு பாவங்களினின்று உன்னைக் கழுவிக்கொள்ள நீ வழி தேடுவாய். நீ சில பாங்களை அறிக்கையிடவில்லை என்று வைத்துக் கொள்வோம். அல்லது நீ செய்த சில பாவங்களை மறந்திருக்கலாம். அல்லது அவை அவ்வளவு பெரியபாவங்கள் அல்லவென்று நீ எண்ணலாம். எப்படியிருந்த போதிலும், அறிக்கையிடப்படாத பாவங்கள் உன்னில் இருக்கும்வரை, தேவனுடைய முகம் உனக்கு மறைக்கப்பட்டிருக்கும். யு+தாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடத்துக் கொம்புகளிலும் பதிந்திருக்கின்றது. (எரேமி. 17:1 ) உன்னுடைய இருதயம் முற்றிலும் கழுவப்படாவிட்டால் பரலோகத்தில் நீ பிரவேசிக்க முடியாது. தீட்டுள்ளதும் அருவருப்பாயும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை.............வெளி :21:27
பரிசுத்தமான கர்த்தர், உன்னைத் தம்மோடு வழக்காடுவதற்கு அழைக்கிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிலிருந்தால் உறைந்த மலையைப்போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ஏசா:1:18 உன் பாவங்களையெல்லாம் நீ அறிக்கைசெய்து விட்டபின்னும், பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் உனக்கில்லை. ஆகவே நீ, ஆண்டவரே! என் பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு விட்டேன். ஏன் என்னிடத்தில் பேசமாட்டீர்? உமது ஆவியை ஏன் என்மீது பொழியமாட்டீர்? சமாதானமும் சந்தோஷமும் எங்கே? என்று தேவனிடம் கேட்கலாம். இதுதான் தேவனுடன் வழக்காடுதல் என்பது. தேவன் நீ செய்ய வேண்டியவைகளைக் கூறுவார். இன்னும் அறிக்யையிடப்படாத பாவங்கள் உன்னில் உண்டென்று தேவன் சொன்னால் உடனே நீ அவற்றைக்கண்டு பிடித்து அறிக்கைசெய்து விட்டுவிடவேண்டும். எல்லாப் பாவங்களும் உனக்கு மன்னிக்கப்பட்டன என்று தேவன் உன்னிடம் கூறுவார்.
தமது பக்தர்களுடன் பேசிய வண்ணம், இன்னும் தேவன் நம்முடன் பேசுகின்றார். நீ உன்னுடைய வேதத்துடன் தனித்துத் தேவனுக்குக் காத்திரு. தேவன் உன்னோடு பேசுவார்.
ஒரு குறிப்பிட்ட விதமாகத்தான் தேவன் உன்னிடம் பேசவேண்டும் என, தேவனுக்கு நீ கட்டளையிட முடியாது. புதிய ஏற்பாட்டில் யோசேப்பிற்கு தேவன் சொப்பனத்தின் மூலமாகவும், ஏசாயாவுக்கு தரிசனத்தின் மூலமாகவும், எலியாவின் மெல்லிய சப்தத்தின் மூலமாகவும், பெல்ஷாத்சாருக்குக் கையெழுத்தின் மூலமாகவும், இன்னும் பலருக்கு வேதவசனத்தின் மூலமாகவும் தேவன் பேசினார். எவ்விதத்தில் தேவன் பேசினாலும் அது தேவனுடைய வார்த்தையைச் சார்ந்ததாகத்தான் இருக்கும். வானமும் பு+மியும் ஒழிந்துபோம், என் வார்த்தையோ ஒழியாது என்று கிறிஸ்து கூறுவதிலிருந்து தேவனுடைய வார்த்தை எவ்வளவு முக்கியமானதென்று அறியலாம். கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல் மனசாட்;சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. (1.தீமோ.1:5)
பின்பு சுத்தமான உன் இருதயத்தினின்று தேவ அன்பு ஆறாகப் பெருக்கெடுத்தோடும். உன் விசுவாசம் அப்போஸ்தலருடைய விசுவாசம்போல் கிரியை செய்யக்கூடியதாக இருக்கும். நீயும் முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்கள்போல் வாழ்வாய். இப்படி வெற்றியுள்ள வாழ்க்கை உனக்கு வேண்டுமாகில், அவருடைய கட்டளைக்கு முதலில் நீ கீழ்படிந்திருக்க வேண்டும்.
ஆபர்ன் என்று இடத்தில் உயிர் மீட்சி
வெளி நாடுகளில் உழைக்கும் போதகர்களைக்குறித்து நல்லெண்ணம், இங்குள்ள பேராசிரியர்களுக்குக் கிடையாது. இருந்த போதிலும், தேவன் தமது ஊழியத்தை இங்கு உயிர்ப்பித்தார். திரு. லான்சிங் என்ற போதகருக்கு மிகப்பெரிய சபையொன்று இருந்தது. அச்சபையினர் மிகவும் புத்திகூர்மை உள்ளவர்கள். ஆனாலும் இவர்கள் மத்தியில் உயிர்மீட்சி உண்டாகி, மிகவும் வல்லமையாய் காணப்பட்டது.
இங்கு உள்ள டாக்டர் தமது ஆத்துமாவில் மிகவும் ஆசீர்வாதமடைந்து முற்றிலும் வேறுபட்ட மனுஷனாக மாறினார். நான் இங்கு வந்த சமயம் இந்த டாக்டர் ஒரு சபையின் மூப்பனாகவும் இருந்தார். அவருக்கு மிக சொற்பமான விசுவாசமே இருந்தது. ஆகவே ஒரு சந்தேகம் நிறைந்த கிறிஸ்தவானகக் காட்சியளித்தார். ஆனால் திடீரென்று பாவ உணர்ச்சியைப் பெற்றுக்கொண்டு மிகுந்த தாழ்மையைக் கற்றுக்கொண்டார். மனம் சோர்ந்து போகும் அளவிற்கு அவருக்குத் தாழ்மையுண்டாயிற்று. இந்நிலையில் எத்தனையோ வாரங்களைக் கழித்தார். அப்பொழுது ஆண்டவர் அவருடைய கண்களைத் திறந்து கிறிஸ்துவின் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காணும்படி செய்தார். நான் ஆபர்ன் என்று இடத்தை விட்டு டிராய் என்ற இடத்திற்கு ஊழியத்திற்காக புறப்படும் நேரத்தில் இக்காரியங்கள் நடைபெற்றன. டிராய் என்ற இடத்திற்கு டாக்டரும் வந்துவிட்டார். அங்கு நான் அவரைச் சந்தித்த போது, அவர் என்னை நோக்கி, சகோ.பின்னி! அந்த மக்கள் இரட்சகரைப் புதைத்துவிட்டனர். என்று கூறினார். அப்பேர்ப்பட்ட அற்புதமான ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார். பிறகு வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்தார்..நான் செய்த ஊழியத்தை அங்குள்ள அநேக போதகர்கள் விரும்பவில்லை. ஆகவே ஆபர்ன் என்ற கிராமத்தில், எனக்கு விரோதமாக அநேகர் எழும்ப ஆரம்பித்தனர்.
ஒரு ஓய்வுநாள் காலையில் நான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். பொதுவாகக் குடும்பங்களில் ஆண்கள் இடையு+று செய்து, குடும்பத்தினர் இரட்சிப்படைவதற்குத் தடை செய்வார்கள் என்று விளக்கிக்கூறினேன். மீண்டும் நான் அவர்களை நோக்கி, நீங்கள் மட்டும் எனக்கு நன்றாக அறிமுகமானவர்களாயிருந்தால், இவ்விதமாக நடந்து கொள்ளும் ஆண்களின் பெயர்களை கூட பகிரங்கமாகச் சொல்லிவிடுவேன் என்று கூறினேன். அப்போழுது திடீரென்று ஒரு மனிதன் எழுந்து நின்று உரத்த சத்தமாய், உமக்குத் தைரியமுண்டானால் என் பெயரைச் சொல்லுமே, என்று கூறினான். அவன் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டிருந்ததாகத் தெரிந்தது. உண்மையில் அவன் தனது குடும்பத்தை இவ்விதமாகத்தான் நடத்திவருகிறான் என்று தெரியவந்தது. அவனை அறியாமலேயே அவன் அவ்விதம் கூக்குரலிட்டான். ஆனால் துர் அதிர்ஷ்டத்தின் பயனாக, அவன் கடைசி வரையும் இரட்சிக்கப்படாமலேயே போய்விட்டான்.
அச்சமயம் அங்கு தொப்பிவியாபாரம் செய்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவி கிறிஸ்துவை அறிந்தவள். அவர் எல்லாக் கடவுளும் ஒன்றே என்று சொல்பவர். உயிர்மீட்சியை எதிர்ப்பவர். என்னுடைய கூட்டங்களுக்கு வரக்கூடாதபடி தன் மனைவியைத்தடை செய்தார். ஒரு நாள் காலை கூட்டத்திற்கு மணியடித்தபோது, அந்த அம்மாளுக்கு மிகவும் துக்கமுண்டானது. அவள் ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே என் கணவனுடைய நிலையைக் கண்ணோக்கிப்பாரும். என்னைக் கூட்டத்திற்குப் போகவிடவில்லையே. என்று கதறி ஜெபித்தாள்.
அப்பொழுது திடீரென்று அவளுடைய கணவன் கடையைவிட்டு வீடு திரும்பினான். வீட்டிற்குள் நுழைந்ததும், தன் மனைவியைப் பார்த்து, நீ கூட்டத்திற்குப் போகவில்லையா? நீ போனால் நானும் வருகிறேன். என்று கூறினார். தான் கூட்டத்திற்குப் போனதன் நோக்கம், என்னவென்றால் அதில் தனக்குச் சாதகமாகக் கிடைக்குமென்றும், அதைக் கொண்டு தன் மனைவியை இன்னும் அதிகமாகத் துன்புறுத்தலாம் என்பது தான், வெகுநாட்களுக்குப் பிறகு இதைத் தெரிவித்தான். இவற்றையெல்லாம் அறியாமல் இருவரும் ஒன்று சேர்ந்து கூட்டத்திற்குச் சென்றனர்.
இவையெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அநேகரைச் சந்தித்து ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்ததால், பிரசங்கம் செய்வதற்குமுன் அதிகநேரம் ஜெபிக்க முடியவில்லை. திடீரென்று அசுத்த ஆவிபிடித்த மனிதன் என்னை விட்டுவிடுங்கள். என்று கூறிய வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வந்தன. இவ்வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, எப்படிப் பாவிகள் தங்களை விட்டுவிட வேண்டுமென்று கேட்கின்றார்கள். ஆண்டவரோடு எவ்வித சம்மந்தமும் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கூறினேன். இவ்வார்த்தைகளை மிகவும் வல்லமையாய்ப் பிரசங்கம் செய்வதற்கு தேவன் கிருபை அளித்தார்.
அச்சமயம் திடீரென்று ஒரு மனிதன் மிகுந்த சத்தத்தோடு தன் ஆசனத்திலிருந்து கீழே விழுந்ததைக் கண்டேன். சபையாரெல்லாரும் அதிர்ச்சியடைந்தனர். அவன் போட்ட சத்தத்தினால், நான் என்னுடைய பிரசங்கத்தை சிறிது நேரம் நிறுத்தவேண்டியாதாயிற்று. நான் சபையாரெல்லாரையும் அமைதியாக உட்காரச் செய்துவிட்டு அந்த மனிதனிடம் சென்றேன். அப்பொழுது அவன் தொப்பி வியாபாரியென்று அடையாளம் கண்டுகொண்டேன். தேவனுடைய ஆவியானவர் அவன் மீது பலமாக இறங்கினார். பாவ உணர்ச்சி அதிகமாக ஏற்பட்டதால் அவனால் ஆசனத்தில் உட்கார முடியவில்லை. பிறகு அவன் முழங்காலில் நின்று கொண்டு தன் தலையை அவன் மனைவிமீது வைத்துக்கொண்டு, சிறுபிள்ளையைப்போல் விம்மி, விம்மி அழுதான். நான் சிலவார்த்தைகளைப் பேசினோன். அவன் அதைக் கவனிக்கவில்லை. உடனே என்னுடைய முயற்சிகளை நான் நிறுத்திக் கொண்டேன். பிறகு நான் சபையாருக்கு அந்த மனிதன் யாரென்று சொன்னவுடன், எல்லாருமே விம்மி விம்மி அழ ஆரம்பித்தனர். அவனுடைய தலையை தன்னுடைய கரங்கிளிலே பிடித்திருந்த அவன் மனைவியின் முகத்தில் சந்தோஷமும், வெற்றியும் காணப்பட்டன. அக்காட்சியை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
கூட்டம் முடிந்து அந்த வியாபாரி வீடு திரும்பியதும் தன்னுடைய நண்பர்கள் எல்லாரையும் அழைத்தான். அவர்களுடன் சேர்ந்து அவன் தேவனுடைய காரியங்களை பரியாசம் பண்ணியிருந்தான். ஆனால் இப்போது நொருங்குண்ட இருதயத்துடன் அவர்கள் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டான்.
இரண்டு மூன்று நாட்களாக அவன் வெளியெங்கும் போகாமல், தான் தவறு இழைத்த ஒவ்வொருவரையும் அழைத்து மன்னிப்புக்கேட்டான். அவன் வேலைசெய்ய வெளியே புறப்பட்டபோது, மிகவும் தாழ்மையாகவும் எளிமையாகவும் அதைச் செய்தான். பின்பு அவனைச் சபைக்கு மூப்பனாக நியமித்தார்கள். அவனுடைய புதிய வாழ்க்யையானது அநேகருக்குச் சவாலாக இருந்தது. அநேக எதிர்ப்புக்கள் தகர்த்துப்போட்டது.
அப்பொழுது அப்பட்டிணத்தில், உள்ள சில பணக்காரர்கள், எங்கள் ஊழியத்தை எதிர்க்க ஆரம்பித்தனர். அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து, இரட்சிக்கப்படாத மக்களையும் கூட்டீக்கொண்டு ஒரு தனி சபையை, எங்களுக்கு போட்டியாக ஆரம்பித்தனர்.
நான் ஆபர்னில் தங்கியிருந்தபோது சுற்றுப்புறங்களில் உள்ள ஆலயங்களில் பிரசங்கம் செய்தேன். காயுகா ஸ்கெனெட்டில்ஸ் போன்ற இடங்களுக்கு உயிர் மீட்சி பரவியது. இது 1826 ஆம் ஆண்டு கோடை காலத்தில் நடைபெற்றது.
நான் சுற்றுலா பிரயாணம் செய்து முடித்து ஆபர்னா பட்டணத்திற்கு திரும்ப வந்தபோது, அங்குள்ள சபைப் போதகர் டாக்டர் லான்சிங் என்பவரின் விருந்தாளியாக இருந்தேன். அந்த சபையானது மிகவும் உலகப் பற்று நிறைந்திருந்தது. ஆகவே இரட்சிக்கப்படாத சிலர் ஒன்று கூடி, சபையின் மூப்பர்களுக்கு விரோதமாக குற்றம்சாட்டினார்கள். ஆதலால் நான் ஒய்வு நாளில், உலகப்பற்றுதலுக்கு விரோதமாகப் பிரசங்கம் செய்தேன். தேவனுடைய வார்த்தை மக்களுடைய இருதயங்களில் ஆழமாகச் சென்றன. வழக்கம்போல, கூட்டம் முடிந்ததும் போதகரை அழைத்து ஜெபம் செய்யுமாறு கேட்டேன். அவர் ஜெபம் செய்வதற்குப் பதிலாக, நான் பிரசங்கம் செய்த காரியங்களை உறுதிப்படுத்திப் பேசினார். உடனே சபையாரில் ஒருவன் எழுந்து நின்று, போதகரே! நீர் கூறும் வார்த்தைகளினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. நீர் விலையுயர்ந்த ஆடைகளைத் தரித்திருக்கிறீர்! விரலில் பொன் மோதிரம் அணிந்திருக்கிறீர்! உம்முடைய மனைவியும், உமது குடும்பத்தினரும், நவநாகரீகமான ஆடையணிந்து ஆலயத்தின் முதல் இடத்தில் அமர்ந்திருக்கின்றனர் என்று உரத்த சத்தமாகக் கூறினான். இவ்வார்த்தை அப்போதகரை ஏறக்குறைய கொன்று போட்டது போல இருந்தது. உடனே போதகர் பிரசங்க பீடத்தின்மீது சாய்ந்து சிறுபிள்ளையைப்போல அழ ஆரம்பித்தார். சபையாரெல்லாரும் அசைக்கப்பட்டனர். ஏறக்குறைய எல்லாருமே தலைகளை கீழே தொங்கவிட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து, நான் எழுந்து ஒரு சிறு ஜெபம் செய்து கூட்டத்தை முடித்துவிட்டேன்.
பிறது போதகர் வீட்டிற்குச் சென்றோம். அவர் உடனே தன் விரலில் இருந்த மெல்லிய மோதிரத்தைக் கழட்டிவிட்டு, என் மனைவி மரணத்தருவாயில் இருக்கும்போது அவள் ஞாபகார்த்தமாக இந்த மோதிரத்தை நான் போட்டுக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள். அதனால் தான் நான் இதுவரை அணிந்திருந்தேன். என்று கூறினார். தான் அணிந்திருந்த ஆடைகளைப்பார்த்து, சிறுவயதுமுதல் இவ்விதமான விலையுயர்ந்த ஆடைகளை உடுத்தியிருக்கிறேன். இதில் யாதொரு தவறுமிருப்பதாக தெரியவில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு இது இடையு+றாக இதையும் கழற்றி விடுகிறேன் என்று கூறினார்.
இச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குள்ளாக, சபையினர் தங்கள் பின்வாங்குதலையும், அன்பற்ற தன்மையையும் பகிரங்கமாக அறிக்கையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். இவை அனைத்தும் ஒருங்கே எழுதப்பட்டு, சபையார் முன்பாக வாசிக்கப்பட்டது. அச்சமயம் எல்லோரும் எழுந்துநின்று அழுதனர். தேவனுடைய ஊழியம் வல்லமையாக முன்னேறிற்று.
மேற்கூறிய அறிக்கையானது இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்ட காரியமாகும். போலியான காரியமல்ல. தேவன் அதை அங்கிகரித்ததால், சத்துருக்களின் வாய்கள் அடைக்கப்பட்டன. அச்சமயத்தில் அங்குள்ள சபைப்போதகர்கள் ஆவிக்குரிய விசஷத்தில் மிகவும் தாழ்வான நிலையில் இருந்தனர். ஆகவே உயிர் மீட்சி உண்டான போது, அவர்கள் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் யார் யார் உயிர்மீட்சியைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்க வில்லையோ. அவர்கள் அனைவரும் ஆசீர்வாதத்தை இழந்துவிட்டனர்.
ஊழியமானது பரவிச்செல்லும்போது, ஆபர்ன் பட்டிணத்திலும், சுற்று வட்டாரங்களிலும் மிகவும் சுவையான இரட்சிப்பின் பல சம்பவங்கள் நடந்தன. 1831 ஆம் ஆண்டு வசந்த கால நாட்களில், நான் இங்கு மீண்டுமொரு வல்லமையான உயிர் மீட்சியைக் கண்டேன். இதைக்குறித்து விபரங்களை நான் தனியே எழுதுகிறேன்.
நான் சில நாட்கள் நியுலெபனான் என்ற இடத்தில் தங்கியிருந்தேன். முன்பு நடைபெற்ற கூட்டங்கள் மக்களுடைய பக்தியைப் பாதித்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அப்படியிருக்குமானால் அநேக எதிர்ப்புக்கள் வெளித்தோன்றியிருக்கும். ஆனால் அதற்கு மாறாக நியுலெபனானில் உள்ள சபையானது, பலப்படுத்தப்பட்டது. ஆகையினால் ஒருவரை ஒருவர் பலப்படுத்தினார்களே தவிர, ஒருவருக்கொருவர் இடையுறாக இருக்கவில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்கள் கூட்டங்கள் முடித்துவிட்டு, பிரசங்க பீடத்திலிருந்து கீழே இறங்கினவுடன் ஒரு அம்மாள் என்னை தனது ஊருக்கு வந்து பிரசங்கம் செய்யும்படி அழைத்தார்கள். நான் அநேக இடங்களுக்கு பிரசங்கம் செய்வதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்ததால், அவள் ஊருக்கு வரமுடியாது என்று கூறினேன். அந்த அம்மாள் அதிக வருத்தமடைந்தார்கள். நானும் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து போய்விட்டேன்.
பிறகு நான் ஸ்டீபென் டவுன் பட்டணத்திலுள்ள சபையைக்குறித்து விசாரித்தேன். அங்கு வாழ்ந்த ஒரு பணக்காரன் மரித்துப்போகும்போது நிறையப் பணத்தை விட்டுச் சென்றான். அதை வைத்து ஒரு ஆலயத்தை கட்டி ஒரு போதகரை நியமித்தான். சில காலத்திற்குள், அச்சபையின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி விட்டது. ஆகவே அந்தப்போதகர், ஆண்டவரை மறுதலித்து, கிறிஸ்துவின் சத்துருவாக மாறி பயங்கரமாக ஜீவிக்க ஆரம்பித்தான். அவனுக்குப் பிறகு இரண்டு மூன்று போதகர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனாலும் சபையின் நிலை பயங்கரமாகி விட்டது. கடைசியில் அந்த ஆலயத்தில் ஆராதனை செய்வதை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள ஒரு சிறுபள்ளிக்கூடத்தில் ஆராதனை நடத்தி வந்தார்கள். கடைசியாக அங்கு வேலைபார்த்த போதகர் சரியாக ஊழியம் செய்யவில்லை என்ற காரணத்தால் வேலை நீக்கம்செய்து விட்டனர். பிறகு அங்கு உழைக்கும்படி வேறு எந்த சபையினரும் முன்வரவில்லை. ஆகவே அப்பட்டிணம் முழுவதும் ஆவிக்குரிய முறையில் பாழடைந்து போயிற்று. சபையில் 3 மேய்ப்பர்களும், 23 அங்கத்தினர் மட்டும் மீதியிருந்தனர். அவர்களில் ஒரேயொருவர் தான் திருமணமாகாதவர். அவர் தான் என்னை கூட்டம் நடத்தும்படி அழைத்தார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று, நான் பிரசங்கம் முடித்து கீழே இறங்கினவுடன், மறுபடியும் அந்த அம்மாள் என்னிடம் வந்து, அவர்கள் ஊருக்கு வரும்படி கெஞ்சிக்கேட்டார்கள். அவர்களுடைய ஊரில் நடைபெறும் காரியங்களை எனக்குத் தெரியுமா என்று மீண்டும் கேட்டார்கள். நான், ஆம் எனக்குத் தெரியும் என்று சொன்ன மாத்திரத்தில் அவர்களுக்கு உணர்ச்சி பொங்கிற்று. அப்பொழுது நான் அவர்களை நோக்கி, உங்கள் சபை மூப்பர்கள் எனக்கு அழைப்புக்கொடுத்தால், கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5-6 வருவேன் என்று பதிலளித்தேன். உடனே அந்த அம்மாளின் முகம் மலர்ந்தது. அவர்கள் வீடு திரும்பியதும் நடக்கவிருக்கும் கூட்டத்தைக்குறித்து அதிகமாக பிரசுரம் செய்தார்கள்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை என்னைக் கூட்டிச்செல்லும்படி, புதிதாக இரட்சிக்கப்பட்ட ஒருவர் வந்தார். அவருடன் ஒரு குதிரை வண்டியைக் கொண்டு வந்திருந்தார். நான் அவரைப்பார்த்து இந்த குதிரை நம் பத்திரமாக எடுத்தச்செல்லக்கூடுமா? என்று கேட்டேன். அவர், ஓ! கண்டிப்பாகச் செல்லும் என்று பதில் கொடுத்தார். சற்றுநேரம் கழித்து, அவர் மீண்டும் என்னைப்பார்த்து, நீங்கள் இந்தக் கேள்வியை ஏன் கேட்டீர்கள்? என்றார். அப்பொழுது நான் கூட்டத்திற்குப் போகவேண்டுமென்பது தேவனுடைய சித்தமானால் சாத்தான் கண்டிப்பாகத் தடைசெய்வான், அப்பொழுது நமது குதிரை உறுதியாக இல்லாவிட்டால், சாத்தான் என்னைக் கொன்;;று போடுவானே! என்றேன். பிறகு நான் அந்த வண்டியில் ஏறிக்கொண்டுபோனேன். ஆனால் இரண்டு தடவைகள், அந்த குதிரை மிரண்டு வண்டியை வேகமாக இழுத்துச் சென்று, நாங்கள் கீழே தள்ளப்பட்டு கொல்லப்பட்டிருப்போம். இதைக் கண்ட மனிதர் நான் கூறியதை நினைத்துமிகவும் ஆச்சரியமடைந்தார்.
பிறகு நாங்கள் அந்த அம்மாளின் வீட்டை அடைந்தோம். அது ஆலயத்தைவிட்டு சும்மார் அரை மைல் தூரம் இருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் அந்த அம்மாள் எங்களை ஆனந்தக்கண்ணீரோடு வரவேற்றாள். எனக்கென்று ஆயத்தப்படுத்தி வைத்திருந்த ஒரு அறையைக் காட்டினார்கள். சிறிது நேரம் கழித்து அந்த அம்மாள் தனது அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கூட்டம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போனோம். ஒரு பெரிய ஜனக்கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. நான் வார்த்தையைக் கொடுத்தபோது அவர்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அசாதாரண காரியங்கள் ஒன்று நடைபெறவில்லை. அன்று இரவு அந்த அம்மாள், இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டேயிருந்தார்கள். இடையில் மெதுவாய் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்கள். நான் காலையில் புறப்பட்டுப்போகும் போது அந்த அம்மாள் மறு ஞாயிற்றுக்கிழமையும் நான் வரவேண்டுமெனவும் மிகவும் வருந்திக்கேட்டார்கள்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் வந்த போது, முக்கியமான காரியங்கள் ஒன்று நடைபெறவில்லை. ஜனங்கள் மட்டும் இன்னும் அதிகமாகக் கூடியிருந்தனர். அந்த வீடு மிகவும் பழைய வீடாக இருந்ததால், அநேக இடங்களில் முட்டுக்கள் கொடுத்து வைக்கப்பட்டிருந்தன. இம்முறை நான் பிரசங்கம் செய்தபோது, மக்களிடம் இன்னும் அதிகமான கருத்துக் காணப்பட்டது. நான் போய் மீண்டும் மூன்றாவது தடவை பிரசங்கம் செய்தபோது, தேவனுடைய ஆவி மக்களின் மீது ஊற்றப்பட்டது.
அச்சமயம் அங்கு ஒரு நீதிபதியிருந்தார். அவருக்கு நிறையப் பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை. அப்போது என்னை அழைத்த அம்மாள், அங்கு உட்கார்ந்திருந்த வேறு ஒரு வாலிபப் பெண்னைக் காண்பித்தார். அவளிடம் நான் சென்று பேசி ஜெபித்தேன். கூட்டம் முடிந்து வீடு திரும்புவதற்கு முன், அந்த வாலிபப் பெண் இரட்சிப்படைந்தாள். அவள் மிகவும் புத்திசாலியான பெண். அவள்தான், அண்டர்உட் என்ற பிரபல சுவிசேஷகரின் மனைவியாகி, நியு இங்கிலாந்து என்ற இடத்தில் மிகவும் வல்லமையான கிறிஸ்தவளாக விளங்கினாள். அந்த அம்மாளும் வாலிபப் பெண்ணும், உடனே ஒன்றாகச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தனர். இருந்தபோதிலும், சபையிலிருந்த முதியோர் மத்தியில் எவ்வித அசைவையும் காணமுடியவில்லை.
இந்நாட்களில் ஸ்டீபென் டவுனில் உள்ள நிலை அதிகமாக முன்னேறி வந்ததால், நான் நியுலெபனானை விட்டு, இங்கு வந்து தங்கும்படி ஆயிற்று. ஜெப ஆவி நாளுக்கு நாள் அதிகரித்தது வந்ததால், தேவனுடைய வார்த்தை மிகவும் பலவான்களையும் கீழே தள்ளிப் போட்டது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை, தேவன் அன்பாயிருக்கிறார் என்ற வார்த்தையைப் பிரசங்கம் செய்தேன். அப்பொழுது ஜான் என்ற ஒருவர் கூட்டத்தில் எனக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார். அவர் மிகவும் பலசாலியாக இருந்தார். விவசாயம் செய்பவர். நான் முதலில் கண்டது என்னவென்றால், அந்த மனிதர் அதிக வேதனையோடு கீழே விழுந்தார். கீழே விழுந்தவர் அப்படியே எழுந்திருக்க முடியாமல் அப்படியே கிடந்தார். கூட்டம் முடியும் மட்டும் அவர் அதே நிலையில் இருந்தார். சீக்கிரத்தில் அவர் இரட்சிக்கப்பட்டு, வல்லமையான ஊழியக்காரராக மாறினார். அநேகரைக் கிறிஸ்துவிடம் கொண்டு வந்தார்.
இந்த சமயத்தில், அமெரிக்காவில் வாஷிங்டன் என்ற இடத்தில் ஷிப்பேர்டு என்ற பெயர் கொண்ட பிரபலமான வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்டீபென் டவுனில் ஏற்பட்ட உயிர்மீட்சியைக் கேள்விப்பட்டு, தனது அலுவல்களை நிறுத்தி வைத்துவிட்டு, என்னுடன் சேர்ந்து உழைக்கும்படி வந்து சேர்ந்தார். அப்பொழுது அந்த மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடந்துகொண்டிருந்தது. ஊழியத்திற்கு இடையூறு ஏற்படுமோவென்று நான் சற்றுப் பயந்தேன்.
அன்று மாலை நான் பிரசங்கம் செய்தேன். பிரசங்க பீடத்தைவிட்டு இறங்கினதும், இந்த ஷிப்பேர்டு என்ற வழக்கறிஞர் என்னை தனியாக வரும்படி அழைத்தார். நான் அங்கு சென்ற போது, தேர்தல் அதிகாரி ஒருவர் உட்கார்ந்திருக்கக் கண்டேன். நான் சிறிது நேரம் பேசி ஜெபித்தேன். அவர் உடனே இரட்சிக்கப்பட்டார். நான் திரும்பி வந்தபோது, ஆலயத்தின் மறுபுறத்தில் மற்றொருவர் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அவர் தேர்தலில் போட்டியிட்ட அபேட்ஷகர். நான் அவருடன் பேசிய போது பாவ உணர்ச்சி ஏற்பட்டு, அவரும் இரட்சிக்கப்பட்டார்.
அநேக பிள்ளைகளைக் கொண்ட நீதிபதியைக்குறித்து உங்களிடம் கூறியனது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாகச் சேர்ந்து அந்தக் குடும்பத்தில் 16 பேர்கள் இருந்தனர். நான் அந்த ஆலயத்தை விட்டுச் செல்லும்முன்பாக எல்லோரும் இரட்சிப்படைந்தனர். மற்றுமொரு பணக்காரக் குடும்பமொன்று இருந்தது. அவர்கள் எல்லோரும் ஒரே வீதியில் குடியிருந்தனர். அந்த வீதி சும்மார் ஐந்து மைல் நீளமுள்ளது. நான் விசாரித்து அறிந்து கொண்டது என்னவென்றால், அந்த வீதியிலுள்ள ஒருவர் கூட ஆண்டவரை அறிந்துகொள்ளவில்லை என்பதே!
ஆகவே அந்த வீதியிலிருந்த ஒரு சிறு பள்ளிக்கூடத்தில் நான் பிரசங்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. நான் வந்தபோது, பள்ளிக்கூடம் நிறைந்து வழிந்தது. துன்மார்க்கரின் வீடுகளின் மீது ஆண்டவருடைய சாபம் இருக்கிறது. என்ற வசனத்தைக் கொண்டு பிரசங்கித்தேன். சத்தியத்தை மிகவும் தெளிவாகக் கூறுவதற்கு ஆண்டவர் மிகவும் உதவி செய்தார். இந்த வட்டாரத்தில் ஜெபம் செய்யும் குடும்பம்கூட இல்லையே. என்று கூறினேன். அதற்குக் காரணம் அங்கிருந்த போதகர் இப்போது அவர் ஆண்டவரை மறுதலித்துச் சென்றுவிட்டார். ஆகவே மக்கள் இருதயங்களில் எவ்வித மனஸ்தாபத்தின் ஆவியும் இருக்கவில்லை. நான் பேசி முடித்ததும், ஏறக்குறைய எல்லாரும் மனஸ்தாபத்தின் ஆவியைப் பெற்றுக் கொண்டனர். உயிர் மீட்சி மற்ற இடங்களுக்குப் பரவிற்று. ஆனாலும் செல்வாக்குள்ள அநேக குடும்பங்கள் கூட்டங்களுக்கு வரவில்லை. முன்னிருந்த போதகருடைய ஆவி இவர்களைப் பிடித்திருந்தது. இருதயங்களைக் கடினமாக்கிக்கொண்டார்கள். ஆனால் உயிர் மீட்சி ஏற்பட்டபோது, அந்தப்போதகர் திடீரென்று மரித்துப்போனார். உடனே எல்லா எதிர்ப்புக்களும் விழுந்து போயின.
அச்சமயம், நியுலெபனானிலிருந்து என்னுடைய கூட்டங்களில் இரட்சிக்கப்பட்ட ஒரு அம்மாள் ஸ்டீபென் டவுனுக்கு வந்து, கூட்டங்களுக்கு வராதிருந்த குடும்பங்களைச் சந்தித்தாள். அவளுடைய அழைப்புக்கு இணைங்கி, எல்லோரும் வந்து, தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு இரட்சிக்கப்பட்டனர். கடைசி வரையில் இந்த சபையின் ஆவிக்குரிய உற்சாகம் தணியவில்லை.
மற்ற இடங்களில் நேரிட்டபோது, இங்கும் ஆவியானவர் ஊக்கமான ஜெபத்தைக் கொடுத்தார். மக்கள் இரட்சிக்கப்பட்டனர். அவர்கள் ஆண்டவரின் அன்பினால் தூண்டப்பட்டு, முழு வட்டாரத்தையும் அசைத்தனர். சகலவித எதிர்ப்புக்களும் ஓடி ஒழிந்தன. ஆரம்பத்தில் சிறிய மனக்கஷ்ரத்தை மக்கள் காட்டியபோதும், ஆவியானவரின் வல்லமையினால், பிறகு எவ்வித புகார்களும் எழும்பவில்லை.
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும், பாவத்தைவிட்டுத் திரும்பி, தேவனுக்குத் தம்மை முழுவதுமாக ஒப்பிவித்து தம் சிறந்த கிறிஸ்தவ வாழ்க்கையினால் நம் நாட்டு மக்களை சிலுவையின் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசையும் ஆர்வமும்.

0 comments:
Post a Comment