Friday, July 3, 2015


கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு- ஜார்ஜ் முல்லர்

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - 1 பேதுரு 5:7.

விசுவாசத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜார்ஜ் முல்லர் George Mueller (1805-1898)  என்னும் அருமையான தேவ ஊழியர். அவர் கர்த்தருக்காக தன் வாழ்நாளில் பெரிய காரியங்களை செய்ததுமல்லாமல், விசுவாசத்தில் எப்படி எல்லாம் சாதிக்கலாம் என்பதை நடைமுறையில் செய்துக் காட்டியவர். அவர் அநேக அனாதை இல்லங்களை வைத்து நடத்தியவர்.  மாத சம்பளம் ஒன்றும் பெறாமல் கர்த்தர் மேல் விசுவாசத்தின் மூலமே அவைகளை நடத்திக் காட்டியவர். அவர் ஒருமுறை தன் அனாதை இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை கீழ்க்கண்டவாறு கூறினார்:
ஒரு நாள் காலை உணவிற்கு நேரம் வந்தபோது இங்கிலாந்தில் உள்ள எனது அனாதை இல்லத்தில்
உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டு-மென்றாலும் கையில் பணமும் இல்லை. என்னைக்
காண என் நண்பனின் மகள் வந்திருந்தாள். அவளை சாப்பிடும் அறைக்குக் கூட்டிச் சென்று,  'எங்கள் தகப்பன் செய்யப் போகும் காரியத்தைப் பார்' என்றுக் கூறி, அவளை அந்த இடத்தில் அமரச் செய்தேன். அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து, எங்கள் தலைளை தாழ்த்தி, 'எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடு;க்க இருக்கும் உணவிற்காக நன்றி'  என்றுச் சொல்லி ஜெபித்தோம்.
ஆமென் என்றுச் சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளைச்
செய்பவர் நின்றிருந்தார். அவர், 'எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதியதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்' என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக உடைந்துப் போய் விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமென்றால், அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்றவேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டாராம். 'அன்று அருமையான காலை உணவு எங்களுக்கு கிடைத்தது'  என்று முல்லர் கூறினாராம்.
உங்கள் தேவைகளைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?  அவர் உங்களை
விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று வசனம் கூறுகிறது. அன்று கேரீத் ஆற்றங்கரையில் எலியா தீர்க்கதரிசிக்கு காகங்களைக் கொண்டு காலையும் மாலையும் போஷித்து  (1 இராஜாக்கள் 17:6-7) வழி நடத்தின தேவன், இன்றும் உங்கள் தேவைகளை சந்திக்க மாறாதவராயிருக்கிறார். 
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையைக் காண்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறினதுப் போல நாம்
விசுவாசித்தால் தேவன் நம் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்ய வல்லராயிருக்கிறார். ஒரு
முல்லருடைய வாழ்வில் அற்புதங்களைச் செய்ய தேவன் வல்லமையுள்ளவராயிருக்கும்போது நம் வாழ்விலும் அவர் செய்ய வல்லவராகவேயிருக்கிறார். அவர் படசபாதமுள்ள தேவன் அல்ல. ஆனால் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று வேதம் கூறுகிறது. நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் கலங்க வேண்டும்? அவர் நம் தேவைகளை சந்திக்கிற யெகோவாயீரே! கடன்தொல்லையா? பணத்தேவையா? வேலையில்லாத
பிரச்சனையா? கலங்காதிருங்கள்! விசுவாசத்தோடு தேவனிடம் கேளுங்கள். தேவன் உங்கள் தேவைகளை சந்திக்க போதுமானவராயிருக்கிறார். வானமும் பூமியும் அவருடையது. அவருடைய பிள்ளளைகளாகிய நமக்கு செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். பெரிய காரியங்களைச் செய்ய நம்தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.
      கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
      கலங்கி தவிக்காதே
      அவரே உன்னை ஆதரிப்பார்
      அதிசயம் செய்வார்
      நீதிமான் தள்ளாட விடமாட்டார்
      நித்தமும் தாங்கி நடத்திடுவார்

0 comments: